முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் புதிய திட்ட அறிவிப்புகளுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டு, முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் புதிய விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியதாவது: தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்ற வகையில் புதிய தொழில் பிரிவுகளில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். குறிப்பாக, விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நாம் செல்ல வேண்டும். இதையொட்டி ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - 2025’ க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. அதேபோல, குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், விண்வெளி துறைக்கான தொழில்நுட்பத்தில் தகுதியான, திறமையான நபர்களை உருவாக்குவதும் இதன் இலக்காகும். இவை அனைத்தும் உயர்தர வேலைவாய்ப்புகள் ஆகும்.
நாம் எப்போதும் உற்பத்தி துறையில்தான் கவனம் செலுத்துவோம். ஆனால், இந்த முறை விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்து விண்வெளி தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறையில் உலக அளவில் நிலவி வரும் போட்டியில், தமிழகத்தின் பாய்ச்சலுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் வகையில் முதல்வர் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார். இதில் முக்கிய அம்சமாக ரூ.25 கோடி முதலீடு கொண்ட சிறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் ஊக்கம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் தமிழகத்தில் கிடைக்கின்றன. அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக, தமிழக தலைநகர் சென்னையில் ஒரு நிறுவனம் மிகச்சிறப்பாக பணிகளை செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காப்புரிமை பெறுவதற்கும் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். ரூ.300 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்.
அதேபோல, தமிழகத்தில் ஒருசில இடங்களில் ‘ஸ்பேஸ்-பே’ என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் முதலீடுகள் வரும்பட்சத்தில் அதற்கும் சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஊதிய மானியமாக முதல் ஆண்டு 30 சதவீதம், 2-ம் ஆண்டு 20 சதவீதம், 3-ம் ஆண்டு 10 சதவீதம் என ஊக்கத்தை இந்த கொள்கை வழங்குகிறது. விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கக்கூடிய இளம் தலைமுறையினருக்கு இது மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும்.
உலக அளவில் இருக்கும் பல தொழில்முனைவோரும் இனி தமிழகத்தை நோக்கி வருவார்கள். விண்வெளி தொழில்நுட்பத்தை சேர்ந்த தொழில்கள் இனி தமிழகத்தை நோக்கி அதிக அளவில் படையெடுக்கும். குறிப்பாக குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழகத்தை சேர்ந்த பகுதிகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விண்வெளி தொழி்ல்நுட்பம் சம்பந்தப்பட்ட தொழி்ல்கள் மிகப்பெரிய அளவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.