தஞ்சாவூர், மே 9–
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானுார் சவுந்தரயநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி உட்பட ஏழு சிவன் கோவில்களை உள்ளடக்கி சப்தஸ்தான திருவிழா நடந்ததாக வரலாறு உள்ளது.
100 ஆண்டுகளுக்கு முன், இந்த திருவிழா நின்று போனது.
இதையடுத்து, ஏழூர் மக்கள் ஒன்று கூடி, மீண்டும் சப்தஸ்தான விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை, திருக்கானுார் கோவிலில் இருந்து, பல்லக்கில் சாமி அலங்கரிக்கப்பட்டு, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி வரை சென்றது.
பின், திருச்செந்தலை சிவன் கோவிலில் நடந்த மீனாட்சி கல்யாண வைபவத்தில், கரும்பேஸ்வரர் கலந்து கொண்டார். ஏழூர்களிலும் பல்லக்கில் வலம் வந்த சவுந்தரயநாயகி சமேத கரும்பேஸ்வரர், மீண்டும் திருக்கானுாரை அடைந்து, பொம்மை பூ போடும் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைந்தது.