வந்தவாசி, மே 09:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்பில் நேற்று திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் குறள் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க செயலாளர் ஆ.மயில்வாகனன் தலைமை தாங்கினார். தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு முன்னிலை வகித்தார். கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் கலந்து கொண்டு 'திருக்குறளின் மேன்மை ' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பங்கேற்று, திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறள் வாசித்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.