பெஷாவர்:
பாகிஸ்தானில் பயணியர் ரயிலை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அரசு தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், 214 ராணுவ பிணைக்கைதிகளை கொன்றதாக தெரிவித்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி, நீண்ட நாட்களாக பலுாச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இதை பாக்., அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கிளர்ச்சியாளர்கள், அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெஷாவர் நோக்கி சென்ற ஜாபர் பயணியர் விரைவு ரயிலை, சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். அதில், பெரும்பாலும் பாக்., ராணுவத்தினர் இருந்தனர்.
பொதுமக்களில் சிலரை விடுவித்த கிளர்ச்சியாளர்கள், 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். அவர்களை மீட்க பாக்., ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டனர். இதில், 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பலுாச் விடுதலை அமைப்பின் மூத்த நிர்வாகிகளை, இரு நாட்களுக்குள் விடுதலை செய்யும்படி, பாக்., அரசுக்கு கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்தனர்.
இந்த கெடு நேற்று முடிவடைந்தது. தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடுப்பான கிளர்ச்சியாளர்கள், பிணைக்கைதிகளாக இருந்த 214 ராணுவ வீரர்களை துாக்கிலிட்டு கொன்றதாக நேற்று அறிவித்தனர்.
பாக்., அரசின் பிடிவாத குணமே தங்களது முடிவுக்கு காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், இந்த தகவலை பாக்., அரசு மறுத்துள்ளது.