tamilnadu epaper

அதீத வெப்பத்திற்கு சின்ன பிரேக்..

அதீத வெப்பத்திற்கு சின்ன பிரேக்..

சென்னை

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெயில் உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. பல இடங்களில் தினசரி வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்த போதிலும் பெரும்பாலும் வெப்பமான வானிலையே இருந்தது.


குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகரில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் உடன் காற்றின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ள.. வெளியே சென்றாலே அசவுகரியமான சூழல் நிலவியது. இதற்கிடையே நேற்று சென்னைக்கு அருகே மழை மேகங்கள் உருவாகி இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  


இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்வீட்டில், "வேலூர் மற்றும் சென்னைக்கு இன்று மட்டும் கொஞ்சம் (அதீத வெயிலில் இருந்து) நிவாரணம் கிடைக்கலாம்.. இரு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்தது. வேலூரில் நேற்று முன்தினம் இரவு வெப்பம் 40.6 டிகிரி செல்சியஸை தாண்டிய நிலையில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

நேற்று காலை சென்னை கடற்கரைக்கு அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு மழை மேகக்கூட்டம் நகர்ந்தது. இதனால் சில இடங்களில் மழை பெய்தது. வட சென்னையில் கடற்கரைக்கு அருகில் உள்ள கத்திவாக்கம் மற்றும் எண்ணூரில் பலத்த மழை பெய்தது. இன்று இந்த மழை மேகங்கள் சென்னைக்குள் வரலாம். இது வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், நாளை வெப்பம் மீண்டும் உயரும்" என்று பதிவிட்டுள்ளார்

முன்னதாக வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்று (12-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 13 முதல் 16 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு என்பது இன்றைய தினம் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.