tamilnadu epaper

அப்பாவின் ஆசை...

அப்பாவின் ஆசை...


      பரமசிவம், ஊரே பெருமையாக பேசும் நல்ல மனிதர். வயது என்பத்தைந்தை தாண்டும். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனிதர். உதவி கேட்க தயங்கும் நபர்களை கூப்பிட்டு உதவி செய்யும் மனோபாவம் கொண்டவர். எல்லோரிடத்திலும் அன்பாய் இருப்பார். எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பத்தில் முதல் ஆளாய் நிற்பார்

        திடீரென்று உடல்நலம் சரியில்லாமல்

படுத்த படுக்கை ஆகிவிட்டார். இனி, தான்

உயிரோடு இருக்கப்போவது என்னவோ நாள் கணக்குதான் என்று தெரிந்து கொண்டார். தன் ஒரே மகனை அழைத்தார்.

"கடைசி ஆசையா ஒன்னு கேட்பேன் செய்வியா..."

                  "சொல்லுங்கப்பா...

"இது நாள் வரைக்கும் எல்லார்க்கும் நல்லதே செஞ்சிட்டேன்... கடைசியாவும்

ஒரு நல்லது செஞ்சிட்டு போகலான்னு ஆச

பட்டன் நிறவேத்துவியா..."

      "கண்டிப்பா நிறவேத்துறன் அப்பா..."

   "நான் இறந்தபிறகு எனக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவங்க என் பிணத்துக்கு மாலை போட்டு மரியாதை

செலுத்துவாங்க...அந்த மாலை ஒரு நிமிஷம் கூட என் பொணத்துமேல இருக்க போறது இல்ல...தெருவுலத்தான் தூக்கி 

வீச போறாங்க...காச மரியாதங்குற பேர்ல விரயம் பண்ண வேணாம்...யாரும் மாலை

போடவேணாம்ன்னு முன் கூட்டியே தெரிவிச்சிடு... அதுக்கு பதிலா நிவாரண நிதின்னு ஒரு உண்டியலை வை... விருப்பம் உள்ளவங்க அதுல மாலைக்காக செலவு பண்ற பணத்த போட சொல்லு... அந்த பணத்த ஏதாவது அனாத ஆசிரமம் முதியோர் இல்லம் இப்படி ஏதாவது ஒண்ணுக்கு உதவி பண்ணிடு...

அதுவே எனக்கு செலுத்துற மரியாத ...என் ஆத்மாவும் சாந்தி அடையும்... இந்த செயல

எப்படியாவது நடைமுறை படுத்திட்டா...இத

பாத்து இனிவரும் சாவுகளில் பலரும் செஞ்சாங்கன்னா கண்டிப்பா பல ஆசிரமங்கள் பயன் பெற வாய்ப்பு இருக்கு...

சிரமம் பாக்காம என் கடைசி ஆசைய நிறைவேத்துப்பா..."

    "சரிப்பா..." என்றுசொன்ன மகனின்

கண்களில் ஈரம் கசிந்தது. மகனின்

கைகளை இறுக பற்றி இருந்த பரமசிவத்தின் கைகள் தளர்ந்தன.



-சுகபாலா,

திருச்சி.