புதுடெல்லி, ஏப். 21–
டெல்லியில் உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி ஐஎல்பிஎஸ் மருத்துவக் கல்வி மையத்தில், கல்லீரல் மறுவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்து பேசியதாவது:
எனக்கு, முன்பு உடல் எடை அதிகமாக இருந்தது. அதனால், சில மருத்துவப் பிரச்னைகளும் இருந்தன. வாழ்க்கை முறையை மாற்றி, அந்த பிரச்னைகளை சரி செய்திருக்கிறேன்.
ஆரோக்கிய ரகசியம்
தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேரம் தூக்கம், சரியான உணவு, சுத்தமான குடிநீர் ஆகியவைதான் என் ஆரோக்கிய ரகசியம். இவற்றை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அதனால், 2019 மே முதல், என் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களை சாதிக்க முடிந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக, எனக்கு அலோபதி மருந்து, இன்சுலின் எதுவும் தேவைப்படவில்லை. என்னால் சோர்வின்றி உழைக்க முடிகிறது. சிறப்பாக சிந்தித்து, முடிவெடுக்க முடிகிறது.
எல்லாரும், குறிப்பாக இளைய தலைமுறையினர், தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், உங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். உடலை, மூளையை சரியாகப் பயன்படுத்துங்கள். அவற்றின் ஆரோக்கியத்துக்கான பயிற்சி மற்றும் ஓய்வை அலட்சியப்படுத்தாதீர்கள். அதன் மூலம், உங்கள் ஆயுளில் சிறப்பாகச் செயல்படும் 40 அல்லது 50 ஆண்டுகளை அதிகரித்துக் கொளளுங்கள்.
ஆரோக்கியத்துக்கு நகைச்சுவை ரசனையும் உதவும். எனக்கு கார்ட்டூன்கள் பிடிக்கும். என்னை பற்றிய விமர்சனக் கார்ட்டூன்களையும் ரசிப்பேன். கார்ட்டூன்களை, நல்ல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உணவு, போதுமான தண்ணீர், போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மற்றபடி மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்கும்
இவ்வாறு அமித்ஷா பேசினார்.