23,ஏப்ரல், அறந்தாங்கி.
அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -1 மற்றும் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவும் இணைந்து நடத்தியிருந்த கட்டுரைப்போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டியில் ( சுவர் இதழ் தயாரித்தல்) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் உலக புத்தக தின விழா, கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை, தலைமையேற்று,போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு நூல்களை வழங்கி, உலக புத்தக தின வாழ்த்தையும் தெரிவித்தார். அவர் தமது உரையில்," இந்திய நாட்டின் வரலாற்றில் சனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பெற்ற நாள், தேசிய வாக்காளர் தினம், இந்திய குடியரசு தினம் என அவை முறையே சிறப்புப் பெற்றவை. இன்று உலக புத்தக தின விழாவில், மாணவர்கள் நிரம்ப நூல்களை வாசிக்க வேண்டும். புத்தகங்களை வாசிப்பதுதான் மாணவர்களின் தனி அடையாளமாக இருக்க வேண்டும். பெரிய பெரிய அறிஞர்கள் இன்றைக்கு நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்றால்,அதற்குக் காரணம் அவர்களுடைய வாசிப்புப்பழக்கம்தான் காரணம். மாணவர்கள் நூல்களை வாசிக்க வாசிக்க அவர்களின் அறிவு பெருகும். அறிவு பெருகினால் வாழ்வில் எல்லா நலங்களும் கூடும். அந்நலங்களும் நிலைக்கும். நூல்களை வாசிக்கிற நாம் நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் புதிதாக நூல்களைப் படைக்கவும் முயல வேண்டும்" என்று பேசினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த கல்லூரிக்கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து. சண்முகசுந்தரம், தனது உரையில், "மாணவர்கள் புத்தகத்தினுடைய மேல் பக்கங்கள் அல்லது விலையை பார்க்கக்கூடாது. புத்தகத்தினுடைய பொருள் அடக்கம் உள்ளே இருக்கிற பொருளின் அடக்கம் என்னவென்று பார்க்க வேண்டும்.நூல்களை, அப்படிப்பார்த்து வாங்கிப்படித்தால் ஒவ்வொரு நாளும் உலக புத்தக தினமாக மாறும். வரலாறு படைக்க நினைக்கும் நீங்கள் கண்ணியமிக்க தலைவர்கள, அறிஞர்களின் வரலாற்றைத் தவறாது படியுங்கள் " என்று வாழ்த்தினார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பெற்ற போட்டிகளுக்கான பரிசு நூல்களை அறந்தாங்கி வட்டாட்சியர் சார்பாக வழங்கி வாழ்த்துரை வழங்கிய துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) தி. ஆரியங்காவு, மாணவர்களை வாழ்த்திப் பேசினார். அவர் தமது வாழ்த்துரையில், " நீங்கள் இதுபோல் ஒவ்வொரு போட்டியிலும் குறிப்பாக நம் அரசு நடத்துகிற தேசிய வாக்காளர் தினம் போன்ற பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பங்கேற்க வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றமைக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சார்பாகவும், அறந்தாங்கி வட்டாட்சியர் சார்பாகவும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வாக்களிப்பதின் நோக்கத்தையும், அவசியத்தையும் நீங்கள் உணர்ந்தது போலவே. எந்நாளும் வாக்காளர் கடமைகளை நீங்கள் உங்களைச்சார்ந்தவருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அறிஞர் கள் பலரும், நூல்கள் வாசிப்பதில் சளைக்காதவர்கள் என்பது நமக்குத் தெரிந்த வரலாறு. அந்த வரலாற்றின் பக்கங்களில் நீங்களும் இடம்பெற வேண்டுமானால் நிரம்ப நூல்களை வாசிக்க வேண்டும். அதற்காகவே இன்றைக்கு உலக புத்தக தின விழாவை முன்னிட்டு உங்களுக்கான பரிசுகள், நூல்களாக வழங்கப்பெற்றிருக்கின்றன. இந்த வாய்ப்பை வழங்கிய கல்லூரி முதல்வர் அவர்களுக்கு நன்றி" என்று கூறினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை ஒருங்கிணைத்தார்.
கணினி அறிவியல் துறை விரிவுரையாளர் பொ. கார்த்திகேயன், தமிழ்த்துறை விரிவுரையாளர் ரா. ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.