கதிரவனின் இளம் கதிர்களின் வெளிச்சத்தில் கணேஷ் பார்க்கில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு முன் ஒரு ஜோடி...இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு மெதுவாக பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓரமாக பேசிக் கொண்டே போனாலும், இவருக்கு வழி அடைத்து கொண்டு போவது போல உணர்ந்தார். எரிச்சலுடன் சட்டென விறுவிறு என நடந்து அவர்களை முந்திக்கொண்டு சென்றார். சிறிது நேரத்தில் நடை பயிற்சி முடித்து லேசான நிழலில் அமர்ந்தார். சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தவரின் கண்களில் மீண்டும் அந்த ஜோடி.... சற்று கூர்ந்து கவனித்தார். இருவரும் 60 ஐ கடந்தவர்கள். மெல்லிய புன்னகையில் இளம் வெயிலில் அவர்களின் முகம் பிரகாசமாய் ஜொலித்தது. அப்பொழுதும் கணவன் ஏதோ சொல்ல அவரின் மனைவி மெல்ல வெட்கத்தோடு சிரித்தார். கணேஷுக்கு ஏதோ போல் இருந்தது. அப்போதுதான் அவருக்கு தன் மனைவியின் முகம் பளிச்சென்று தோன்றியது.மனைவியிடம் இப்படி கூட பேச முடியுமா....? பேச என்ன இருக்கு...? சிறிது நேரத்தில் அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். சிந்தனைத் தெளிந்தவராய்....இத்தனை வருடத்தில் நான் கமலத்திடம் ஆசையாய் பேசியது இல்லையே.... அட இன்று திருமண நாளாச்சே! அதையும் மறந்துட்டேனே!...
உண்மையில் கமலம் நல்லவள்... இத்தனை வருடத்தில் அவளுக்காக எதுவும் என்னிடம் கேட்டதில்லை. ஆரம்பத்தில் புடவை, பூ, வளையல், நகை.... என கேட்பாள். அதான் உன்னிடம் பணம் கொடுக்கிறேனே... நீயே வாங்கிக்கோ... உனக்கு ஒரு ஆள் வாங்கி தரணுமா..? என முகத்தில் அடித்தார் போல பலமுறை கூறி திட்டியதால் அவள் எதையுமே என்னிடம் கேட்பதில்லை. சிக்கனமாக செலவு செய்வாள். சீட்டு பிடிப்பது... வங்கியில் சேமிப்பது....என பல வழிகளில் பணத்தை சேமித்து, நான் பொருளாதாரத்தில் உயர பக்கபலமாய் இருந்தாள். ஆனால் அவளை நான் ஒரு நாளும் பாராட்டியது இல்லை. அவள் ஆசையாய் பேச வந்தாலும்... அவளின் அழகையோ... அறிவையோ... செயலையோ... எதையோ ஒன்னு பட்டுனு கூறி அவளை திட்டுவேன்... அவளின் மலர்ந்த முகம் வாடி விடும். சில நேரம் என் வார்த்தைகள் அவள் கண்களை குளமாக்கும். மறைத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வாள். திருமணம் ஆகி வெளியூரில் இருக்கும் மகனோ.. மகளோ... வந்து தங்கும் பொழுது மட்டும் அவளது முகம் புன்னகை பூக்கும். அவர்கள் சென்று விட்டால் மீண்டும் அமைதியாய் அவரவர் வேலையை பார்ப்போம்... பேசிக் கொள்வோம்.... தகவல்களை பரிமாறிக் கொள்வோம். ஆனாலும் அன்பு, பாசம் என்ற உயிரோட்டம் இருக்காது.இயந்திரத்தனமான வாழ்க்கை.
யோசிக்க யோசிக்க மனம் வலித்தது. எதற்காக இப்படி வீராப்பாய் வாழ்கிறோம். கணேஷின் மனம் ஏதோ செய்தது... எனக்காக வாழ்பவள்.. அவளுக்காக நான் என்ன செய்தேன்..? பணம் சம்பாதித்து கொடுத்தால் போதுமா..? அப்படித்தானே இத்தனை காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதே வீட்டிற்கு போய் கமலத்திடம் "உனக்காக நான் இருக்கிறேன்" என்று கூறிவிட வேண்டும் என்று நினைத்தவரே வீட்டிற்குச் சென்றார்... வழியில் இரண்டு முழம் மல்லிகை பூ வாங்கிக் கொண்டார்... வீட்டிற்கு சென்றதும்,கமலம்...இந்தா பூ... இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.... என்னை மன்னிச்சிடு கமலம்...நான் ஆசையாய் உன்னிடம் நடந்து கொண்டதே இல்லை. உனக்காக அக்கறை பட்டதும் இல்லை. ஆனால் இதை எதையும் நீ வெளிக்காட்டிக் கொண்டதில்லை. என்னை மன்னிச்சிடு... "உனக்காக நான் இருக்கேன்" கமலம் ஐ லவ் யூ மா.... என்ற கணேஷை வெட்கத்தில் பார்த்து சிரித்தாள் கமலம்.... சந்தன மாலை இடப்பட்ட தங்க நிற பிரேம் போட்ட புகைப்படத்தில்..
முனைவர். உமாதேவிபலராமன்,
117- பைபாஸ் சாலை, திருவண்ணாமலை.606601.