அந்த ஊரில் மிகப்பிரபலமான டெய்லர் மைக்கேல்.
வீட்டின் முன்புறமே கடை வைத்திருந்தார்.
ஆறரை அடிக்கு மேல் உயரம்.ஆஜானுபாகுவான தோற்றம்.
“அண்ணே... எனக்கு பேண்ட் ஷர்ட் தைக்கணும்” என்றவாறு வந்தார் ஜேம்ஸ்.
“வா ஜேம்ஸ். நீ எப்போதும் ரெடிமேட் பேண்ட் ஷர்ட்தானே போடுவே...” சிரித்தவாறே கேட்டார் மைக்கேல்.
“அது ஒண்ணுமில்லே அண்ணே... தொப்பை விழுந்துடுச்சா... உடம்பு அன்சைஸ் ஆயிடுச்சு... அதான்!”
“சரி சரி வா அளவு எடுக்கலாம்!” என்றவாறு அளவெடுக்க ஆரம்பித்தார் மைக்கேல்.
“என்னைக்கு வாங்கிக்கலாம் அண்ணே?” என்ற ஜேம்ஸிடம்-
“சனிக்கிழமை என் பர்த்டே. அன்னைக்கே வந்து வாங்கிக்கோ கேக்கோட...” என்றார் மைக்கேல்.
“அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே!” என்றவாறு கிளம்பினார் ஜேம்ஸ்.
சனிக்கிழமை அதிகாலை விடிந்தது அதிர்ச்சியான செய்தியுடன்.
' மாரடைப்பால் டெய்லர் மைக்கேல் மரணம்.'
மைக்கேல் வீட்டுக்கு ஓடோடிச் சென்றார் ஜேம்ஸ்.
தனக்காக தைத்து வைத்திருந்த பேண்ட் ஷர்ட் தையல் மெஷின் மேல் இருந்தது.
பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு சடலமாகக் கிடந்த மைக்கேலை அளவெடுக்க ஆரம்பித்தார்- சவப்பெட்டி செய்யும் தொழிலாளியான ஜேம்ஸ்.
*-ரிஷிவந்தியா,*
*தஞ்சாவூர்.*