வேகமாய்ச் சென்று கொண்டிருந்த காரின் டிரைவர் இருக்கையிலிருந்த மூத்த பெண்மணி அருகில் அமர்ந்திருந்த மகள் பவானியை சரமாரியாய் திட்டிக் கொண்டிருந்தாள்.
"உனக்குக் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை... நிச்சயதார்த்தத்துக்கு போட்ட மோதிரத்தை தொலைச்சிருக்கே. நாளைக்கு கல்யாணத்தப்ப மாப்பிள்ளை உன் கையை பார்த்துட்டு "எங்கே நான் போட்ட மோதிரம்?"ன்னு கேட்டா என்ன செய்வே?"
"திரு... திரு"வென விழித்தபடி அமர்ந்திருந்தாள் மகள் பவானி.
" ஹும்... அதே மாதிரி மோதிரத்தை வாங்குவதற்கு எத்தனை கடை ஏறி இறங்கணுமோ தெரியல" சலித்துக் கொண்டாள் தாய் லட்சுமி.
அதே நேரம்.
கோயில் குளத்தில் மூழ்கி பக்தர்கள் உள்ளே எறிந்துள்ள சில்லறைகளை வெளியே கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்த முருகனின் கைகளில் சிக்கியது ஒரு மோதிரம்.
"அடப்பாவமே.. யாரோ குளத்தில் கை கழுவும் போது மோதிரத்தை விட்டுட்டாங்க போலிருக்கு... சரி சில்லறைகளைக் கொண்டு போய் கொடுக்கும் போது இதையும் கோவில் நிர்வாகத்திடமே கொடுத்திடலாம்"
சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
தனது இருசக்கர வாகனத்தில் சில்லரை மூட்டையோடு சென்று கொண்டிருந்த முருகன் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரையும் அதன் அருகில் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த லட்சுமியையும், பவானியையும் பார்த்து, "என்ன ஆச்சுங்க?... கார் ரிப்பேரா?" கேட்டான்.
"ஆமாம் தம்பி திடீர்னு ஆஃப் ஆயிடுச்சு ஸ்டார்ட் ஆகலை"
முருகன் இறங்கிச் சென்று பானெட்டைத் திறந்து எதையோ செய்தான். பிறகு டிரைவர் இருக்கைக்கு தானே சென்று ஸ்டார்ட் செய்து பார்த்தான்.
கார் உடனே ஸ்டார்ட் ஆனது.
நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினர் லட்சுமியும் பவானியும்.
சிறிது தூரம் சென்றபின் காலில் ஏது உறுத்த குனிந்து பார்த்தாள் பவானி.
நிச்சயதார்த்த மோதிரம்.
"அம்மா மோதிரம் இங்கே கிடக்கு" சந்தோஷமாய்க் கூவினாள்.
அதே நேரம்,
கோயில் நிர்வாகத்திடம் சில்லறை மூட்டையை ஒப்படைத்து விட்டு தன் சட்டை பாக்கெட்டில் கையை நுழைத்துப் பார்த்த முருகன் மோதிரம் இல்லாதிருக்க யோசித்தான். "எங்கே விழுந்திருக்கும்?"
நெடிய யோசனைக்கு பின் "சரி எதை எங்கே சேர்க்கணுமோ அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஆண்டவன் கெட்டிக்காரன்... அதற்காகத்தான் என் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொண்டான் போலிருக்கு.. செய்யட்டும் செய்யட்டும்!" தனக்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் முருகன்.
( முற்றும்)
முகில் தினகரன், கோயம்புத்தூர்.