ஆன்மீகம் மனிதநேயம்
இரண்டும் இல்லாமல்
உலகம் அமைதியுடன்
சுழலப் போவதில்லை !
இனிக் கோவில்களில்
மனிதக் கூட்டங்களோடு
மனித நேயத்தையும்
கனிவுடன் நிரப்புங்கள் !
ஆன்மிகம் மனிதநேயம்
கைகோர்த்து செல்லும்போது
சுனாமி அலைகள்கூட
சுருண்டு விடும்
சூறாவளி காற்றுகூட
தென்றலாக மாறி விடும் !
ஆன்மீகம் மனிதநேயம்
ஆரத் தழுவிச் சென்றால்
குண்டுகள் முழங்காது
குருதிகள் கொட்டாது
சுட்டெரிக்கும் சூரியன்
சுடுவதை நிறுத்திடுவான் !
ஆர்ப்பரிக்கும் கடலில்
காகிதக் கப்பல் கூட
சிதைந்து விடாமல்.
கரை சேர்ந்து விடும் !
வெண்ணிலவு கூட
விண்ணில் ஓய்வில்லாமல்
முழுநிலவாக முப்பதுநாளும்
வானில் பவனி வரும் !
உயிர்க்கொலை புரிதலை
உள்ளத்தில் எண்ணாமல்
உயிர் இரக்கத்துடன்
எவ்வுயிரையும் நேசிப்போம் !
வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளலார்
வழியில் செல்வோம்
ஆன்மிகம் மனிதநேயம்
இரண்டும் கைகூப்பி
முன் நின்று வரவேற்கும்!
கவிஞர் பூ. சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை