வர்தமானர் என்ற இயற்பெயருடன் பிறந்து, வளர்ந்தவர் மகாவீரர். இவர் தனது அரசு வாழ்வு, மனைவி, அரண்மனை சுக போகங்கள் அனைத்தையும் துறந்து துறவி வாழ்க்கை மேற்கொண்டார். அன்பையும் அகிம்சையையும் போதித்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிக துறவிகளில் மகாவீரரும் ஒருவர்.
அரச குடும்பத்தில் பிறந்து, ஆன்மிக நாட்டத்தால், துறவு வாழ்க்கை மேற்கொண்டவர் மகாவீரர். சமண சமயத்தை உலகிற்கு அறிமுகம் செய்த ஜைன மதத்துறவியான மகாவீரரின் போதனைகளும், தத்துவங்களும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் மகாவீரரின் சமண மதத்திற்கு மாறி, அவரின் போதனைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
அன்பையும், மனித நேயத்தையும் அகிம்சையையும் போதிக்கும் உன்னதமான கோட்பாடுகளைக் கொண்டது மகாவீரரின் போதனைகள். அவர் ஜீனர் என்றும் அழைக்கப்படுகிறார். ஜீனர் என்றால் வெற்றி கொண்டவர் என்பது பொருள். அப்படிப்பட்ட மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தி அல்லது மகாவீரர் ஜெயந்தி என ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றோம்.
இன்று மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 10 ம் தேதி வருகிறது. இந்த நாளில் மகாவீரர் உலகிற்கு போதித்த போதனைகளில் சிலவற்றை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.
எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருத்தல், உண்மையை மட்டுமே பேசுதல், திருடாமை, பாலுணர்வு கொள்ளாமை, செல்வங்கள் மீது பற்று கொள்ளாமல் இருப்பது ஆகிய ஐந்தும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாகும்.