tamilnadu epaper

நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு

நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களையும் வழங்கும்.


இதனை கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத "கிரகணப் பருவம்" காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 2025-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் விண்வெளியில் ஏவுவதற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியா-அமெரிக்கா கூட்டு ஏவுதல் மீண்டும் இந்த ஆண்டு இறுதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.


இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் வருகிற மே அல்லது ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சோதனையில் செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட்டபோது, நிசார் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதாவது, நிசார் செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் விட்டம் கொண்ட 'பிரதிபலிக்கும் ஆண்டெனா' விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.


இதை நிவர்த்தி செய்வதற்காக பிரதிபலிக்கும் ஆண்டெனா அதிக வெப்பமடைவதை தடுக்க ஒரு சிறப்பு வெப்ப பூச்சுக்காக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பூச்சு பயன்படுத்தப்பட்ட பிறகு நிசார் செயற்கைக்கோளுடன் மிண்டும் ஒருங்கிணைப்பதற்கும், மேலும் சோதனை செய்வதற்கும் ஆண்டெனா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பணிக்கான ஏவுதளத் தயார்நிலை தேதியை வரும் வாரங்களில் நாசா-இஸ்ரோ தீர்மானிக்கும்' என்று தெரிவித்தனர்.


இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் மீண்டும் பல்வேறு கட்ட சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் தேதியை இந்த ஆண்டின் இறுதிக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது' என்றனர்.