கராச்சி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கராச்சியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளேன். இது எனக்கும் அணிக்கும் சரியான முடிவு. யாராவது ஒருவர் வந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உடன் இணைந்து பணியாற்றுவார்.
அணியை எங்கு சிறப்பாக கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு செல்வார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் எனது கேப்டன்சிக்கு முக்கியமானது, ஆனால் ஆட்டத்தின் முடிவுகள் எங்கள் வழியில் செல்லவில்லை. பதவி விலக இதுவே சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்" என்றார்.
34 வயதான ஜாஸ் பட்லர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தது. எனினும் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2024-ல் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கவில்லை. மேலும் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இங்கிலாந்து அணியின் செயல் திறன் சிறப்பானதாக அமையவில்லை. தனிப்பட்ட வகையில் ஜாஸ் பட்லரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.