அன்னை தெரசா மாதர் சங்கத்தின் அவசரக் கூட்டம், மாதர் சங்கத் தலைவி திருமதி.வைதேகி தலைமையில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.அம்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்க உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
செயலாளர் திருமதி .சுந்தரவல்லி அனைவரையும் வரவேற்று பேசினார்.அவசரக் கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிப் பேசினார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான தொந்தரவு தரும் ஆண்களுக்கு தண்டனை வழங்கும் போக்சோ சட்டம் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நீங்கள் பணிபுரியும் இடத்திலும் மற்றும் பொது இடங்களிலும் உங்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை நீங்கள் கூச்சப்படாமலும், அச்சப்படாமலும் காவல் நிலையத்தில் புகாராகத் தெரிவிக்கவேண்டும்.இதனை உங்களது குடும்பத்திலுள்ள பெண் உறுப்பினர்களுக்கும் அவசியம் தெரிவிக்கவேண்டும்.இதில் எவ்விதமான அலட்சியமும் இருக்கக்கூடாது என்று தெளிவாக பேசிவிட்டு அமர்ந்தார்.
உறுப்பினர்களில் சிலர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
முக்கியமாக செயற்குழு உறுப்பினர் திருமதி.கமலா பேசும்போது போக்சோ சட்டத்தின் கீழ் தொலைக்காட்சி ஊடகங்களையும் கொண்டு வரவேண்டும் என்று பேசியபோது அனைவரும் ஆச்சரியமாக கமலாவை பார்த்தனர்.
தொடர்ந்து பேசிய கமலா, தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் இடையிடையே வரும் விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.
உள்ளாடை விளம்பரத்தில் கூட பெண்களை அரைகுறை ஆடையோடு விளம்பரம் செய்கிறார்களே; ஏன் இவர்கள் மீது போக்சோ சட்டத்தை பயன்படுத்தி தண்டனை தரக்கூடாது. இப்படியாக பெண்களைக்கவர்ச்சியாகக் காட்டும் விளம்பரங்கள் கூட பாலியல் ரீதியானதாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது?
இதனையும் போக்சோ சட்டத்திற்குள் கொண்டு வந்து, இப்படியான விளம்பரம் செய்யும் கம்பெனிகள் மீதும் இதனைக் காட்சிபடுத்தும் ஊடகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கவேண்டும்.
பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; என்றால் இதற்கும் போக்சோ சட்டத்தை அவசியம் பயன்படுத்தவேண்டும். என்பதை எனது தாழ்மையான வேண்டுகோளாகத் தெரிவித்து தனது உரையை முடித்துக் கொண்டார்.
இறுதியாக பேசிய தலைவி வைதேகி, இப்போது பேசி அமர்ந்துள்ள நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கமலா அவர்கள் தெரிவித்த கருத்து யாருடைய சிந்தனையிலும் வராத மிகப்பெரிய கருத்தாகும்.இதனை நான் மனதார வரவேற்கிறேன். இப்படியான விழிப்புணர்வுதான் பெண்களுக்கு தேவை. அவருடைய உரையில் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் பெண்களை அரைகுறை ஆடையுடன் விளம்பரம் செய்வதை முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றால்
அவர்கள் மீதும் போக்சோ சட்டத்தை பயன்படுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
இந்த சிறப்பு க் கூட்டத்தில் இதனை முக்கிய தீர்மானமாக நிறைவேற்றி, நமது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.மேலும் மகளிர் ஆனையத்திற்கும் இந்த தகவலை கொண்டு செல்லவேண்டும்.இதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அன்னை தெரேசா மாதர் சங்கம் கட்டாயமாக முன்னெடுக்கும் என்று உறுதியாக கூறுகிறேன்.
இந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ,என்று கூறி அமர்ந்தார்.
இந்த தீர்மானத்துக்கு நாங்கள் அனைவரும் முழு ஆதரவை ஏகமனதாகத் தருகிறோம் என்று அனைவரும் எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.
-ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.