tamilnadu epaper

இதேபோல வேறு யாராவது பேசியிருந்தால் இந்நேரம்.." - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கண்டிப்பு

இதேபோல வேறு யாராவது பேசியிருந்தால் இந்நேரம்.." - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கண்டிப்பு

சைவம் - வைணவம் தொடர்பான அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சு துரதிர்ஷ்டவசமானது, சகித்துக்கொள்ள முடியாதது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதற்காக பொன்முடி மீது எஃப்ஐஆர் பதிவு செய்து வரும் 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.


சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளி்த்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக, உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.


இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தான் கொண்டுவந்த பென்-டிரைவ் மூலமாக, சைவம் - வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரையில் திரையிட்டார். பின்னர் நீதிபதி கூறியதாவது:


அமைச்சராக பதவி வகிக்கும் பொன்முடியின் இந்த பேச்சு துரதிர்ஷ்டவசமானது. பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவதூறாக பேசியதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் பதவி வகித்துவரும் அவர் பொறுப்பை உணராமல் பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் இந்நேரம் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அவர் பேசும் இந்த வீடியோ இன்னும் சமூக வலைதளங்களில் தடையின்றி பரவி வருகிறது.


எனவே, பெண்கள் பற்றியும், சைவம் - வைணவம் குறித்தும் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது போலீஸார் சட்டப்படி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தானாக முன்வந்து டிஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுக்க நேரிடும்.


இதேபோல வேறு யாராவது பேசியிருந்தால் இந்நேரம் குறைந்தது 50 வழக்குகளாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். சீமான், கஸ்தூரி, ஹெச்.ராஜா, அண்ணாமலை உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லையா. கஸ்தூரியை சிறையில் அடைக்கவில்லையா. சட்டம் அனைவருக்கும் பொது. ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ, அதேபோல வெறுப்பு பேச்சுகளையும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட பொன்முடி, உச்ச நீதிமன்ற உத்தரவை தவறாக பயன்படுத்த கூடாது. எனவே, இந்த வழக்கை மாலை 4.45 மணிக்கு தள்ளிவைக்கிறேன். அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து டிஜிபி ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும். இவ்வாறு கூறி, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


மாலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.


அதற்கு நீதிபதி, ‘‘5 எஃப்ஐஆர் போட்டால் வழக்கு நீர்த்துப் போய்விடும். அவர் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுவிட்டார். குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு விட்டதால், அனைத்து புகார்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே எஃப்ஐஆர் ஆக பதிவு செய்து, ஏப்ரல் 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


அப்போது, பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ், ‘‘பொன்முடிக்கு எதிராக நானும் புகார் கொடுத்துள்ளேன். அதன்மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுங்கள்’’ என்றார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற வண்ணம் பூச வேண்டாம்’’ என்றார்.