புதுடெல்லி:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 10 ஆண்டுகளில் 105 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்எப் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த 2015-ம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஜிடிபி 10 ஆண்டுகளில் இருமடங்காகி 2025-ல் 4.3 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி என்பது 105 சதவீத வளர்ச்சியை தக்கவைத்துள்ளது.
அதேநேரம் இதே காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி முறையே 66 சதவீதம் மற்றும் 44 சதவீதம் மட்டுமாகவே இருந்தது.
கோவிட் காலத்தின்போதும் இந்தியாவின் ஜிடிபி 2021-ல் 3 டிரில்லியன் டாலரை தாண்டியது. இது, வெறும் நான்கே ஆண்டுகளில் 4 டிரில்லியன் டாலரைத் தொட்டது.
இதன் காரணமாகவே, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதே வளர்ச்சி வேகம் தொடருமானால் விரைவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறும். வரும் 2027 நிதியாண்டுக்குள் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில் 30.3 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் அமெரிக்கா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து 19.5 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் விரைவான வளர்ச்சி வேகம் நீடிக்கும்போது அடுத்த பத்தாண்டுகளில் இவ்விரு ஜாம்பவான் உடனான பொருளாதார இடைவெளியை இந்தியாவால் கணிசமாக குறைக்க முடியும். இவ்வாறு ஐஎம்எப் தெரிவித்துள்ளது.