கொழும்பு:
இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.
அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு கொழும்புவில் பேசிய அதிபர் அனுர திசநாயக்க, "வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்த கொள்கையின் தொடக்கமாக பிரதமர் மோடியும் நானும் பல்வேறு மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் சாத்தியமான கூட்டாண்மை குறித்து விவாதித்தோம். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்துக்காக இந்திய அரசு வழங்கியுள்ள ரூ.300 கோடி நிதியுதவிக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை அரசு அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடி) இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை வழங்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர். இதனை நாங்கள் பூரணமாக நம்புகிறோம்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது. நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே அண்டை நாடுகளான நாம் ஆழமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் மத ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ளோம். இந்த உறவு இரு நாடுகளுக்கு இடையே பகிரப்பட்ட மதிப்பீடுகள், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்த விருப்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.