tamilnadu epaper

இனி, தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை ரூ.7500; அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.7500 சட்டசபையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

இனி, தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை ரூ.7500; அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.7500 சட்டசபையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

சென்னை, ஏப்.16


‘தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தமிழறிஞர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


தமிழறிஞர்களுக்கு ரூ.4,500 -லிருந்து ரூ.7,500 - ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500 லிருந்து ரூ.7,500 ஆகவும், எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500 -லிருந்து ரூ.7,500 - ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 3 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.


தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையை இன்று சட்டசபையில் தாக்கல் செய்த அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை நிறுவப்படும்.


அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 48 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.


தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும்.


தமிழறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 1 கோடியே 1 இலட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.


சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலத்தில் அமைந்துள்ள திரு.வி.க. நூலகத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கமும், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அங்குள்ள நூலகமும் மேம்படுத்தப்படும்.


புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்குக் கலையரங்கு அருகில் அய்யன் திருவள்ளுவர் சிலை ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்படும்.


இந்திய விடுதலைப் போராட்ட வீரர் க.ரா. ஜமதக்னிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூபாய் 25 இலட்சத்தில் நினைவுத்தூண் நிறுவப்படும்.


புறநானூற்றுப் பாடலை இயற்றி நல்லிசைப் புலமை மெல்லியலார் குறமகள்‌ இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை ரூபாய் 50 லட்சம் செலவில் நிறுவப்படும்.


கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9 ம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.


அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பிறந்த நாளான ஜூன் 15- ம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'அறிஞர்களின் அவையம்' என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும். இதற்கு ரூபாய் 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.2,000 வீதம் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 18 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு 2025- 2026 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூபாய் 12 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.


இவ்வாறு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.