பாரிக்கு இந்த வாரம் இரவுப்பணி. தனியார் கைப்பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை.
கைப்பைக்குக் கைப்பிடி வைப்பதில் பாரி நிபுணன். அவனைத் தவிர அத்தனை அழகாக வைக்கமுடியாது.
ஆகவே நிருவாகம் அவனை அதிகமான கைப்பைகள் கேட்டு ஆர்டர் வரும்போது இரவுப்பணி பார்க்கச் சொல்வார்கள். முதலில் மறுத்தான் பாரி. இரவுப்பணி தன்னால் பார்க்கவியலாது. அப்புறம் குடும்பத்தைப் பார்க்க முடியாது. பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களின் படிப்பு வீணாகிவிடும்.
பார்த்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
அப்படியானால் நான் வேலையை விட்டுப்போய்விடுகிறேன் என்றதும் நிருவாகம் பணிந்தது. திறமையாளனை இழக்க விரும்பவில்லை.
அவசரத் தேவையின் போது மட்டும் இரவுப்பணி பார்க்க வேண்டும் என்றும் அதற்குத் தனியாகக் கூடுதல் தொகை தந்துவிடுகிறோம் என்றும் சொன்னார்கள். சரியென்று சம்மதித்தான்.
இரவுப்பணி முடிய எப்போதும் பதினொன்று ஆகிவிடும்.
வீட்டிலிருந்து அவன் பணிபுரியும் நிறுவனத்திற்கு ரயிலில்தான் செல்வான். மாதம் பாஸ் எடுத்துவிடுவான்.
அன்று பன்னிரண்டு மணியாகிவிட்டது. மிகவும் களைப்பாக இருந்தது. இரவுப்பணியே இனி கூடாது கூடுதல் பணம் தந்தாலும் என்று நினைத்துக்கொண்டான். தலையெல்லாம் கலைந்து கண்கள் இருண்டது போலிருந்தது. பசி வேறு. ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வண்டி நிறுத்தத்திற்கு வந்து வண்டியை எடுக்கலாம் என்று முயன்றபோது வண்டியின் முன் சக்கரம் ஒரு சைக்கிளில் சிக்கியிருந்தது. எடுக்க முயற்சித்தபோது அப்போதுதான் அவனைக் கவனித்தான் பாரி. நன்றாகக் குடித்திருந்த அவன் தன்னுடைய சைக்கிளை எடுக்க முயன்று கொண்டிருந்தான். பாரி தன்னுடைய வண்டியை இழுக்க அதில் அவனுடைய சைக்கிள் கீழே சாய்ந்துவிட்டது. சட்டென்று வேகமாய் நிமிர்ந்தான் அந்தக் குடிகாரன்.
இன்றைக்கு வீட்டுக்குப் போனமாதிரிதான்.. குடிகாரனிடம் மாட்டிக்கொண்டோம். பெரிய ஏழரையைக் கூட்டப்போகிறான் என்று நினைத்து.. சாரி பிரதர் என்றான் பாரி.
அவன் ஒருமுறை பாரியைப் பார்த்துவிட்டுப் பின் சொன்னான்
விடு பிரதர்.. நீயும் குடிச்சிருக்கே.. நானும் குடிச்சிருக்கேன்.. நாம ஒரு சாதி.. நமக்குள்ள என்ன சண்டை.. பை.. போங்க பிரதர்.. நான் பாத்துக்கறேன் என்றான்.
பாரி எல்லாவற்றையும் மறந்து சிரித்தான்.
ஹரணி, தஞ்சாவூர்.