புல்லைக் கூட வளர அனுமதிக்காத போர்டிகோ... பேராசையின் நீட்சி.
தொட்டிச் செடியில் போன்ஸாய் மரங்கள்;
விருந்தினரை நாசூக்காக விரட்ட "நாய்கள் ஜாக்கிரதை" வாசலில் அறிவிப்புப் பலகை;
தொப்பையோடு தோட்டத்தில் ஊஞ்சலாடும் முதலாளி;
வாசலில் மணியொலிக்கும் அவ்வப்போது வரும் சீருடையோடு
எடுப்புச் சாப்பாட்டை எடுத்து வருபவன்.
ஓடி உழைப்பதை அறியாத வாரிசுகள்.
ஓடிக் கொண்டேயிருக்கும்
அணைக்க மறந்த தொலைக்காட்சிப் பெட்டி...
விசாலமான நடுக்கூடத்தில் நின்று, பிச்சை கேட்பவனை விரட்டும் குறுகிய மனம்.
வீடு துடைத்தே நகமும் ரேகையும் தேய்ந்து, வியர்த்து நிமிரும் பாதி வயிறு பசியோடு வேலைக்காரி...
வரவேற்பறையில் கைகளை உயர்த்தி வழுக்கைத் தலையோடு "குபீரென்று" சிரிக்கிறது
குபேரப் பொம்மை.
=தனலெட்சுமி பாஸ்கரன், திருச்சி.