சென்னை, மார்ச் 14–
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி:
மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தவறு. அது கண்டிக்கத்தக்கது. புதிய கல்வி கொள்கை என்பது 2020ல் அறிவித்தார்கள். தற்போது 5 ஆண்டுகள் கழித்து மும்மொழி கொள்கையை திணிப்பது என்ன நியாயம். 4 ஆண்டுகளாக சொல்லாமல் தற்போது ஒப்புகொள்ளவில்லை. அதனால் நிதி தர முடியாது என கூறுவது அரசியல் தானே.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான். எப்போதும் அது மாறாது. வடமாநிலங்களில் இந்தி தான் ஒரே மொழி. அங்கு பேச்சு மொழி, ஆட்சி மொழி என எல்லாம் இந்தி மட்டும் தான். 2ம் மொழியான ஆங்கிலத்தை கூட அவர்கள் கற்று கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் தமிழ்நாட்டை எப்படி அவர்கள் இதுபோன்று சொல்ல முடியும். பாஜ தவிர அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் உள்ளன. அது இருமொழி கொள்கை மட்டுமே என்பது தான். அதை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.