tamilnadu epaper

இறை வழிபாடு – சுடர் வழிபாடு

இறை வழிபாடு – சுடர் வழிபாடு


கடவுள் என்பவர் பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயமாக தன்னை உருவகப் படுத்தி நமக்கு காட்சி தருகிறார். ஒவ்வொருவர் அவரை ஒவ்வொரு விதமாக பார்த்து வழி படுகின்றனர். அவரை பூமி பூஜை, விளக்கு பூஜை, ஜல பூஜை, வாயு பூஜை, ஆகாய பூஜை என்று பல விதங்களில் பூஜை செய்து பக்தி செய்கிறார்கள்.


இவைகளில் நாம் இப்போது நெருப்பை பற்றி பார்ப்போம். 


இந்த நெருப்பு நமக்கு வேண்டிய வெப்பத்தையும் கதிரியக்க ஆற்றலையும் கொடுத்து உயிர் வாழ உதவுகிறது.


பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ஒரு போட்டியை வைத்து சிவன் தனது சாமர்த்தியத்தால் இருவரையும் தங்களது வலிமையை உணர வைக்கிறார். இதற்காக சிவன் ஒரு வானுயுர ஓங்கி வளரும் ஓர் அழல் (நெருப்பு) பிழம்பாக மாறுகிறார். இருவரில் யார் தனது முடியையோ அடியையோ முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவரே வென்றவர் என்று கூறுகிறார்.  


இசைந்து இருவரும் முடியையோ அடியையோ தேடப் புறப்படுகிறார்கள். விஷ்ணு வராக உருவில் அதள பாதாளங்களை தோண்டி சிவனின் அடி தேடியலைந்து தோல்வியடைகிறார். பிரம்மா அன்ன உருவில் முடி தேடிச் செல்கிறார்.  


எத்தனை தேடியும் முடி காணாது ஓய்ந்திருந்தவர் முன் ஓர் தாழம்பூ தலை கீழாக விழுகிறது. நான் சிவனின் முடியிலிருந்து வருகிறேன் என்று கூறுகிறது. உடனே பிரம்மா அந்த பூவை சிவனின் முடியிலிருந்து எடுத்து வந்ததாக பொய் சாட்சி சொல்ல அழைக்கிறார். பொய்யை அறிந்துக் கொண்ட சிவன் பிரம்மாவை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிடுகிறார். தாழம்பூ சிவ பூஜைக்கே சேராமல் செய்கிறார்.  


தனது தோல்வியை உண்மையாக ஏற்று கொண்ட விஷ்ணுவிற்கு பரிசாக தனது முடியையும் அடியையும் காட்டுகிறார். இதற்காக அழல் (நெருப்பு) உருவிலிருந்த இறைவன் மலை உருவில் குறுகுகிறார். அப்படி பொங்கழல் வடிவான இறைவனே அண்ணாமலையானாக நமக்கு காட்சியளிக்கிறார்.


மக்களில் இரு பிரிவினர் உள்ளனர். பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புவது ஒரு பிரிவு. அறிவால் எதையும் ஜெயித்து விடலாம் என்று நினைப்பது ஒரு பிரிவு.  


இங்கு நிதர்சனம் என்னவென்றால் பணத்தால் முடியும் என்ற மமதையும் அறிவால் முடியும் என்ற செருக்கும் இறைவனிடத்தில் தோற்று முடியையும் அடியையும் காணாது நிற்பதுதான். இந்த மாபெரும் உண்மையை விளக்குவதுதான் அண்ணாமலையாரின் கதை.


இப்படி செல்வராலும் அறிஞராலும் காண முடியாத கடவுள் யாருக்கு தன்னை எளியவனாக உருவகப் படுத்தி காட்டுகிறான் என்றால் அவன் மீது தீராக் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் விடும் அடியவர்களுக்கு மட்டுமே.  


பொங்கழில் உருவான அந்த அண்ணாமலையை பார்த்த மாணிக்கவாசகர் “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி” என்று தனது திருவெம்பாவையின் முதல் பாடலை துவங்கி பக்தி ரசத்துடன் பாடிக் கொண்டிருந்த போது பத்தொன்பதாம் பாட்டு முடியும் தருவாயில் இறைவனின் முடியையும் அடியையும் கண்டு விடுகிறார். ஆதியாம் பாதம் அந்தியாம் செந்தளிர்கள் என்றுதானே திருவெம்பாவையின் இருபதாவது பாடல் கூறுகிறது.  


எத்தனை எளியவனாக தனது பக்தனுக்கு காட்சியளித்து பிரம்மாவையும் விஷ்ணுவையும் கூட ஏமாற்றி விடுகிறார் சிவன்……  


இவ்வளவு அதிசயமான உண்மையை ஊர்ஜிதப் படுத்தும் மலைதான் திருவண்ணாமலை. அதன் அடிவாரத்தில் குடி கொண்டிருப்பவர்தான் அண்ணாமலையார்.


ஒரு மனிதனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் அவன் வாழ்வதற்கு ஒளி. கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பு ஒளி என்னும் ஞாயிறுதான். அதனிடமிருந்து வருகின்ற ஒளியும் வெப்பமும் இல்லாவிட்டால் இந்த உலகமும் நீங்களும் நானும் உயிர் வாழ்வது ஏது……  

எனவேதான் சிந்திக்க தெரிந்த மனிதன் ஒளியையும் அந்த ஒளியை கொடுத்த இறைவனையும் தொழுகிறான்.  


இருள் போக்கும் தன்மையோடு நமது மருள் நீக்கும் தூய்மையையும், ஆக்கி, காத்து, அழிக்கும் தன்மையையும் தன் உள்ளடிக்கியுள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான ஒளியிடம்தான் நிறைந்திருக்கிறது. இவ்வாறு அக்னியின் இயல்பும் இறைவனின் இயல்பும் ஒன்றென கலந்திருப்பதாலேயே இந்நாட்டில் ஒளி வழிபாடே தீ வழிபாடாக காணப்படுகிறது.


அடியார்களும் கவிஞர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை பொங்கழல் உருவாகவே பார்க்கிறார்கள். இந்த அனல் வழிபாடே மருவி திருவிளக்கு வழிபாடாக மக்களிடையே நிலைத்து நிற்கிறது. இச்சிறு திருவிளக்கு வழிபாடே பெரும் கார்த்திகை திருநாளாக அண்ணாமலையில் கொண்டாடப் படுகிறது.


இந்த அண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் ஓர் அற்புதமான அனுபவம். 


கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று கோடானு கோடி மக்கள் தங்கள் வீட்டு மாடிகளிலும் கோயில் பிராகாரத்திலும் தெருக்களிலும் குழுமியிருப்பதை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி.  


மாலை 5.45 மணியிலிருந்தே அனைவரது வீட்டு விளக்குகளும் அனைக்கப் படுகின்றன. மாலை ஆறு மணிக்கு கோயிலின் பஞ்ச மூர்த்திகள் மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். மேகங்களே அதிரும் அளவிற்கு ஒரு அதிர் வேட்டு மேலே கிளம்புகிறது. சொல்லி வைத்தது போல் ஐந்து அர்ச்சகர்கள் ஐந்து கற்பூர தட்டுகளை உயர்த்துகிறார்கள். அதே நேரம் அண்ணாமலையின் உச்சியில் இருக்கும் கற்பூரக் கொப்பறையிலிருந்து சுடர் எழுந்து வானத்தை நோக்கி நிமிர்கிறது.  


உடனே அனைவர் வீடுகளிலும் மின்சார விளக்குகளும் அகல் விளக்குகளும் போட்டி போட்டுக் கொண்டு மிளிர்கின்றன. “அரோகரா… உண்ணாமலை சமேத அண்ணாமலைக்கு அரோகரா….” என்ற கோஷம் வின்னை பிளக்கிறது.  


திருவண்ணாமலையே ஒளி வண்ணமாக காட்சி தந்து நமது ஒளி வழிபாட்டின் அழகுக்கு அழகு ஏற்றுகிறது.


திருவண்ணாமலை என்னும் ஒளிமயமான தலத்தில் கால் வைத்தாலே சொர்க்கம் என்று நம்பப் படுகிறது. எனவே அனைவரும் சென்று அந்த ஜோதிஸ்வரூபனை தரிசித்து அருள் பெருவீர்களாக…..

அண்ணாமலைக்கு அரகரோகரா……..


-ரமா ஸ்ரீனிவாசன்