tamilnadu epaper

உலக மகிழ்ச்சி தினம்

உலக மகிழ்ச்சி தினம்


மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது.


ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.


வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது அனைவரின் எண்ணம். வாழ்வின் உந்துசக்தியே மகிழ்ச்சி தான். மகிழ்ச்சியை பெறுவதற்கு கல்வி, உழைப்பு, திறன், பணம் போன்றவை உதவுகின்றன.


மனிதர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அம்சமாக மகிழ்ச்சி உள்ளது. எனவே அது ஒவ்வொருவருக்கும் தேவை. நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது, ​​நமது மூளை டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்களை வெளியிடுகிறது. அது தான் மகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வுகளுக்கு காரணம். நிறைவான வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அவசியம். அந்த மகிழ்ச்சியை அடைவதற்கான எளிய 9 குறிப்புகளை பார்ப்போம்.


1. *நன்றிவுணர்வுடன் பழகுவோம்* 


வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்திருப்பவற்றை எண்ணி நன்றிவுணர்வோடு இருங்கள். ஒரு நல்ல காபி கிடைத்தால், எதிர்பார்க்கும் போது மழை பெய்தால், முகம் தெரியாதவர் நம்மை பார்த்து புன்னகையுடன் கடந்து சென்றால், சென்று நின்றவுடன் மெட்ரோ வந்தால், ஓலா டிரைவர் எக்ஸ்ட்ரா கேட்காமல் இருந்தால் இப்படி நடக்கும் சிறிய சிறிய விஷயங்களைக் கூட நன்றிவுணர்வோடு நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.



2. *விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்* 

படிப்பது, சமைப்பது, விளையாடுவது, ஓவியம் வரைவது அல்லது அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது என உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். .


3. *மற்றவர்களுடன் இணைந்திருங்கள்* 

குடும்பத்தினர் மற்றும் அண்டை அயலாருடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும், நட்பை பராமரிப்பதும் மகிழ்ச்சியின் முக்கிய அம்சம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைய நேரம் ஒதுக்குங்கள். தொலைபேசி அழைப்பு, சாட்டிங் அல்லது நேரில் சந்திப்பது என எதன் வழியாக வேண்டுமானாலும் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.



4. *கடந்த காலத்தின் விரும்பத்தகாத நினைவுகளை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வாழுங்கள்.* 


இதனை மைண்ட்புல்னெஸ் (Mindfulness) என்பார்கள். நிகழ்கால தருணங்களில் முழுமையாக இருப்பது தான் அது. எதிர்காலம், கடந்த காலம் பற்றிய கவனச் சிதறல் இன்றி தற்போதைய தருணத்தில் கவனத்தை செலுத்தி அதில் ஈடுபடுவது மகிழ்ச்சியைத் தரும். இதனை வழக்கமாக்கிக் கொண்டால் மன அழுத்தம், பதற்றத்தை குறைக்கலாம். மனத் தெளிவையும் பெறலாம்.


5. *உடல்நலனில் அதிக கவனம்* 


"A Sound mind in a sound body" என்பது கிரேக்க தத்துவ ஞானி தாலஸின் கூற்று. அதாவது ஆரோக்கியமான வலுவான உடலில் தான் அற்புதமான மனம் உள்ளது என்பது பொருள். மனம் மகிழ்ச்சியாக இருக்க, உடல் உபாதையின்றி இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தைப் பெற உடற் பயிற்சி அவசியம். குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது இருக்க வேண்டும். போதுமான தூக்கமும் அவசியம். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இவைகள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவும்.



6. *கோபம் மனிதனுக்கு எதிரி.*


 தைரியம் இல்லாதவர், தாழ்வு மனப்பான்மை கொண்டவர், தவறுகள் செய்பவர், மனோதிடம் அற்றவர். இவர்கள்தான் தங்கள் குறைகளை மறைத்து தங்களை காத்துக் கொள்ள கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். ஆகவே கோபத்திலிருந்து விடுதலைப் பெறுங்கள். அன்பு, பாசம், நட்பு இவைகளுக்கு மட்டுமே தலை வணங்குங்கள், வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.


7. *நல்ல தூக்கம்* 


நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கும்போது, அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். நல்ல தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறன், மனநிலை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.



8. *மொபைல் போன் பயன்பாடு* 


ஒருவரின் அதிகமான நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பது மொபைல்போன். தகவல் தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்த வந்த மொபைல்போன்களை இன்று 24 மணி நேரமும் பயன்படுத்துகிறோம். 


மேலும், அதிகப்படியான மொபைல் பயன்பாடு உங்களின் மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளைத் தடுப்பதுடன் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். எனவே, மொபைல் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்.



9. *எல்லாம் தற்காலிகமானதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.* 

எந்த ஒரு நிகழ்வும் நிரந்தரமானவை அல்லது இனிமையானவை அல்லது விரும்பத்தகாதவை அல்ல அனைத்தும் கடந்து சென்றுவிடும்.

எல்லாம் தற்காலிகமானதுதான் என்பதை நீங்கள் உணரும்போது, ​​அது அனைத்தும் மறைந்துவிடும், அப்போது நீங்கள் நிரந்தரமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்.


 நாம் மகிழ்ச்சியோடு வாழவும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் இந்த மகிழ்ச்சி தினத்தில் உறுதியெடுப்போம்.



-சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி