tamilnadu epaper

உலக வனங்கள் தினம்

உலக வனங்கள் தினம்

நமது வாழ்வில் காடுகள், வனப்பகுதிகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் மார்ச் 21ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது. தோராயமாக 1.6 பில்லியன் மக்கள் உணவு, தங்குமிடம், ஆற்றல், மருந்து மற்றும் வருமானத்திற்காக காடுகளை நேரடியாக நம்பியுள்ளனர். அதனால் தான் நம் முன்னோர்கள் காடுகளை வன தேவதையாக நினைத்து பாதுகாத்து வந்தனர்.


வனத்தையும் வனத்தில் உள்ள மரங்களையும் காப்பதற்காக நம் முன்னோர்கள் தங்களுடைய உயிரையும் தர முன்வந்த வரலாறை காண்போமா?


 *மருத மரத்தை மருது சகோதரர்களாக நினைத்து பாதுகாத்த முதியவர்* 


காளையார்கோயில் புதுப்பிக்கப் பெற்றபோது, ஈசனும் ஈஸ்வரியும் தேரில் எழுந்தருளித் திருவீதி உலாவர ஒரு புதிய தேரை நிர்மாணிக்க விரும்பினார் பெரிய மருது. இதற்கான பொறுப்பு மாளகண்டானைச் சேர்ந்த குப்ப முத்து ஆசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மிகவும் புகழ் பெற்ற சிற்பக் கலைஞர். மரச்சிற்பங்களை வடிவமைப்பதில் அவருக்கு இணை எவரு மில்லை என்பார்கள்.


தமிழகத்தில் மட்டு மல்லாமல், இலங்கையிலும் புகழ் பெற்ற ஆலயங்கள் பல வற்றிற்கு அற்புதமான தேர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு.

காளீசர் ஆலயத்திற்கான புதிய தேர் செய்ய இரண்டு மருத மரங்களை அவர் தேர்ந்தெடுத்தார். பிரமாண்டமாக வளர்ந்திருந்த அம்மரங்கள் ஒரு சிற்றூரின் ஏரிக்கரையில் இருந்தன. ஆசாரியார் கை காட்டியதும் அம்மரங்களை வெட்ட முயன்றனர் அரண்மனை ஆட்கள். அவற்றை வெட்ட விடாமல் தடுத்தான் ஒரு கிழவன்.


காவலர்கள் அவனை இழுத்துத் தள்ளிவிட்டு, ‘வெட்டுங்கள் மரத்தை’ என உத்தரவிட்டதும், அக்கிழவன் ஆவேசம் வந்தவன் போன்று எழுந்தோடி வந்து, மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘என்னை வெட்டிவிட்டுப் பிறகு மரத்தை வெட்டுங்கள்’ என்று பிடிவாதம் பிடித்தான். அருகில் குடிசையில் இருந்து வெளியே ஓடிவந்த அவனுடைய பெயர்த்தி இன்னொரு மருத மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அதையே சொன்னாள். இரு கொலை அங்கே தவிர்க்க முடியாது என்கிற நிலையில், காவலர்கள் சிவகங்கை அரண்மனைக்குச் சென்று, நடந்த சங்கதியை மருது பாண்டியர்களிடம் தெரிவித்தனர்.

காளீசன் ஆலயத் தேருக்காக இரண்டு மரங்களைக் கூடவா வெட்ட முடியாமல் போவது?’ என்கிற சினத்துடன் மருது பாண்டியர் இருவரும் புறப்பட்டு, நேராக அந்தச் சிற்றூருக்குச் சென்று, தடுத்த கிழவனை அழைத்து விசாரித்தனர்.

பெரியவரே, ஆலயத் திருப்பணியைத் தடுப்பதுபோல் இருக்கிறதே உமது செயல்! ராஜ தண்டனை சிரச்சேதமாகக் கூட இருக்கலாம் என்கிற அச்சமே உமக்கில்லையா? ஏன் தடுத்தீர், இம்மரங்களை வெட்டக் கூடாதென்று?” என வினவினார், பெரிய பாண்டியர். அதற்கு அந்தக் கிழவன் சிறிதும் அச்சமின்றி, “மருது பாண்டியரின் கட்டளையை மறப்பார்களா சிவகங்கை மக்கள்? அரசே, காளீசர் ஆலயத் திருப்பணியில் எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? புதிய தேர் உருவானால், அதில் ஈசனும் தேவியும் எழுந்தருளி மக்களுக்குத் தானே காட்சியளிப்பர்! அதைத் தடுப்பதல்ல என் நோக்கம். இவை மருத மரங்கள். அதுவும் இரட்டை மரங்கள். இவற்றை நாங்கள் வெறும் மரங்கள் என எண்ணவில்லை; மருது பாண்டியர் என்றே கருதுகிறோம். நீங்கள் இருவரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணி, ஈசனை வேண்டி, இம்மரங்களை நாங்கள் பூஜித்து வருகிறோம். அரசனும் கடவுளும் ஒன்று என்பார்கள்.


நாங்கள் மருது பாண்டியர் என்று எண்ணி வழிபடும் இம்மரங்களை வெட்டுவதற்கு எப்படி மனம் ஒப்புவோம்? சிவகங்கைச் சீமை காடுகளுக்குப் பெயர் போனது. இங்கு எத்தனையோ இலுப்பை மரங்கள் இதைவிடப் பெரிதாக, வைரம் பாய்ந்து வளர்ந்து கிடக்கின்றன. அவற்றை வெட்டித் தேர் செய்யலாமே..? இது குப்புமுத்து ஆசாரிக்குத் தெரியாதா?” என்றான்.அக்கிழவன் பேச்சைக் கேட்ட பெரிய மருது சிலிர்த்துப் போனார். அந்த மருத மரங்கள் இரண்டையும் சின்ன மருது பெரிய மருது என்று அப்பெரியவர் குறிப்பிட்டுப் பேசியது, மருது பாண்டியர் மனத்தை நெகிழச் செய்துவிட் டது. உடனே அம்மரங்களை யாரும் வெட்டக் கூடாது என்று ஆணை பிறப்பித்த மன்னர் மருது, அப்பெரியவர் குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


காளையார் கோயில் காட்டிலிருந்து வேறு மரங்கள் வெட்டப்பட்டு, 

புதிய தேர் உருவாக் கப்பட்டது. கோயில் குடமுழுக்கு நிகழ்வையொட்டி, திருத்தேர் உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது.


 *சிப்கோ இயக்கம்:* 


1974-ம் ஆண்டில் உத்தராகண்ட் மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தோன்றியது. ‘சிப்கோ’ என்றால் இந்தியில் ‘கட்டியணைப்பது’ என்று பொருள். கௌராதேவி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் தலைமையில் 27 பெண்கள், ரேணி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரங்களைக் கட்டியணைத்து காப்பாற்றினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் மரம் வெட்டுவதை, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் முழுமையாகத் தடை செய்தார். 


 *மரங்களைக் காக்க உயிர்நீத்த பிஷ்னாய் மக்கள்* 


1730-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில், ‘கெஜ்ரி’ கிராமத்தில், தாங்கள் வளர்த்த வன்னி மரங்களைக் காப்பதற்காக, 363 பிஷ்னாய் மக்கள், உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மரங்களைக் காப்பதற்காக, உயிர்த் தியாகம் செய்த நிகழ்வு, உலகின் வேறு எந்த மூலையிலும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம், வறட்சியான ராஜஸ்தான் மாநிலத்தில், மரங்களே மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரமாகத் திகழ்ந்ததுதான். அதனால்தான், அரசன் வழங்கிய ஆணையின்படி, வன்னி மரங்களை வீரர்கள் வெட்ட முற்பட்டபோது, அம்மரங்களைக் கட்டிப்பிடித்தவண்ணம், பிஷ்னாய் மக்கள் உயிர் நீத்தனர்.

நம் முன்னோர்கள் காட்டினை வனதேவதையாக வணங்கி பாதுகாத்தனர். அவர்கள் வழியில் நாமும் காடுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்.



-சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி