நடு இரவில் தொடர் இருமலோடு புரள்கிறேன்.
சட்டென்று அறையிலிருந்து வெளிப்பட்டு
சமையலறைக்கு வெளிச்சமூட்டுகிறாய்..
அறியாதது போல் கண்மூடிக் கிடக்கிறேன்.
குடுவைக்குள் சுடுநீர் நிரப்பி பக்கத்தில் வைத்து நகர்கிறாய்.
ஆர்வமில்லை என்றாலும்
அர்ச்சகர் தந்த திருநீற்றை
நெற்றியிலிடுகையில் கண்ணிற்
படாது தடுத்தாட்கொள்கிறாய்.
எனக்குப் பிடித்தவற்றை சமைத்து
மேசையில் பரப்புகிறாய்.
பாத்திரம் துலக்குபவளிடம் ரகசியமாய்
"ஐயா தூங்குறாரு
மெதுவாய்" சமிக்ஞை தரும்
உன்னிடம் கற்க வேண்டுமடி
ஊடல் தீர்க்கும் மந்திரம்!
− தனலெட்சுமி