கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிறிய மலைத் தொடரின் ஒரு பகுதி - ஏலகிரி மலை.
ஊட்டி – கொடைக்கானல் – கொல்லிமலை போல மிக உயர்ந்த மலையாக இல்லாத போதும் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஏலகிரி மலை இயற்கை சுற்றுலா தலமாக உள்ளது.
மலை அடிவாரத்தில் இருந்து 14 ஹாப்பி வளைவுகளுடன் மேலே சென்றாள் 14 கிராமங்களை உள்ளடக்கிய ஏலகிரி நம்மை வரவேற்கிறோம் இந்த வளைவுகளில் ஏழாவது வளைவு குறிப்பிடத்தக்கது, இது மலையின் சரிவுகளின் அற்புதமான காட்சிகளையும், பச்சை காடுகளையும் காணலாம்
ஏலமலை, ஏலக்குன்று என்று வழக்கில் இருந்த இம்மலை, ஏலகிரியாக மாறியுள்ளது. ‘கிரி’ என்பது வடமொழியில் மலையைக் குறிக்கும். இன்றும் மக்கள் வழக்கில் ‘ஏலகிரி மலை’ என்றே வழங்குகின்றனர். ஏலகிரி மலைக்கு மிக அருகாமையில் இருக்கும் சவ்வாது மலை சங்க காலத்தில் நவிரமலை என வழங்கப்பட்டது.
மா பலா சீதா கொய்யா இலந்தை பேரிக்காய் விளாங்காய் நாவல் உள்ளிட்ட அபூர்வ மருத்துவ குணமும் உயர்ச்சத்துக்களும் நிரம்பிய பழ வகை மரங்கள் ஏராளம் உண்டு. ஏலகிரி மலைத்தேன் மருத்துவ குணம் நிறைந்தது. இங்கு விளையும் ஏலக்கி என்ற மருத்துவ குணமும் இயற்கை சுவையும் உடைய வாழைப்பழம் இந்த மலையின் தனி சிறப்பு.. தமிழகத்தில் இந்த மலையைத் தவிர வேறு எந்த பகுதியிலும் ஏலக்கி வாழை இத்தனை சுவையோடும் இயற்கை மணமோடும் இருப்பதில்லை என்பது தனிச்சிறப்பு.
ஏலகிரி மலையை சுற்றிலும் இருக்கும் மலை கிராமங்களில் விவசாயம் காய்கறிகள் கீரைகள் பழங்கள் வனம் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழில்கள் மூங்கில் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் கைவினைப் பொருட்கள் என்று விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் பிரசித்தி பெற்றது. இம்மலையில் விளையும் மலைப்பூண்டு , சிறு வெங்காயம் நாட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நிலா ஊர் ஏரி உள்ளிட்ட சுற்று வட்டார ஏரிகள் நல்ல நீர் வளம் கொண்டவை. ஏலகிரி மலையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரியும், மலை மீது இயற்கையாகவே அமைந்த ஒரு பெரிய ஏரியும் ஏலகிரியின் மிகப்பெரிய நீர் ஆதாரங்கள்
ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இயற்கைப்பூங்கா, முருகன் ஆலயம், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் ஆலயம், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க சிறப்பான இடங்களாக உள்ளன.
வேலூர், சென்னை, ஜோலார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள ஜோலார் பேட்டை இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம்.
ஏலகிரியை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற மாநில அரசு முயற்சிகளை முடுக்கிவிட்டு, பயணிகளைக் கவரும் வகையில் மலையேற்றம், பாறை ஏறுதல் மற்றும் பாராகிளைடிங் போன்ற சாகச நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளை ஊக்குவித்து வருகிறது. ஏலகிரி ஜமீன்தார்களின் சொத்தாக இருந்த இந்த மலைப்பகுதி 1950களில் அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஏலகிரி ஜமீன்தார்களின் குடியிருப்பு ரெட்டியூரில் உள்ளது.
ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு, திப்பு சுல்தானின் படையைச் சேர்ந்த வீரர்கள் இப்பகுதியில் குடியேறி விவசாயிகளாக மாறியதாக கூறப்படுகிறது.
*மலையேற்றம்*
ஏலகிரியில் அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் 7 பாதைகள் உள்ளன. இவற்றில் நீளமான பாதை புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது.
*ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி*
வேலூரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் அருகில் ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நீர்வீழ்ச்சியின் அருகில் முருகன் கோயில் உள்ளது.
*இயற்கைப்பூங்கா*
சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இயற்கைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சிகளும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவும், மீன் கண்காட்சியும், மலர்த்தோட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீருற்று இதன் சிறப்பம்சமாகும்.
*புங்கனூர் ஏரி*
இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 56.7 சதுர மீட்டர். இந்த ஏரியில் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் படகு சவாரி செய்யலாம். ஏரியின் நடுவே செயற்கை நீருற்றும், ஏரியின் அருகே குழந்தைகள் பூங்காவும் உள்ளன.
இங்குள்ள *நிலாவூர் ஏரி*யும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது இங்கு படகு சவாரி உள்ளது.
*வேலவன் கோவில்*
வேலவன் கோயில் ஏலகிரி மலைகளின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இங்கு மிகப்பெரிய கடோத்கஜன் சிலையும் உள்ளது. மேலும் இங்கிருந்து ஏலகிரியின் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம்.
*சுவாமி மலை ஹில்ஸ்*
மங்கலம் கிராமத்தில் இருந்து சுவாமிமலை மலை தொடங்குகிறது. கிராமத்தின் மையத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இது மலையேற்றத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பதால் ஒரு முக்கிய அடையாளமாகும்.
குறத்தி மற்றும் குறவன் வடிவத்தில் வள்ளி மற்றும் முருகனின் பிரமாண்ட சிலை கொண்ட முருகன் கோவில் உள்ளது.
*அரசு மூலிகை பூங்கா*
வனத்துறையால் பராமரிக்கப்பட்டு, சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் பல அரிய மூலிகைகள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது. புங்கனூர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது.
ஏலகிரியில் ஆண்டு முழுவதும் மிதமான வானிலை நிலவுகிறது,
கீதா ராஜா சென்னை 41