tamilnadu epaper

எங்கள் ஊர் கலசப்பாக்கம் சிறப்புகள்

எங்கள் ஊர் கலசப்பாக்கம் சிறப்புகள்

 

 

எங்கள் ஊர் கலசப்பாக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமாக அமைந்துள்ளது. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும் கலசப்பாக்கம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

 

 

கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஊர். 

 

ஜவ்வாது மலை தொடர்ச்சியான பருவத மலையின் அடிவாரத்தில் கரிகால சோழனின் வீர வரலாறு தொடங்குவதாகவும் இங்குதான் கரிகாலச் சோழன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளை பழக்கியதாகவும் அதன் மூலம் தன்னுடைய நாட்டை மீட்டதாகவும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

 

இங்கு வடமாதிமங்கலம், தென்மாதிமங்கலம், மாதிமங்கலம் போன்ற பெயர்களையுடைய ஊர்களைப் பார்க்க முடியும். மங்கலம் என்று முடியும் ஊர்கள் என்பது அக்காலத்தில் அரசர்கள் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் என்று செவிவழிச் செய்தி உள்ளது.

இந்த செய்திகளில் மூலம் கலசபாக்கத்தின் தொன்மையும் இயற்கை வளங்களையும் அறிய முடிகிறது.

கலசப்பாக்கம் நகரம் கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் - தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடக்கே போளூர் 10 கி.மீ. தொலைவிலும், ஆரணி 35 கி.மீ. தொலைவிலும் மற்றும் வேலூர் 58 கி.மீ. தொலைவிலும், தெற்கில் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலை 26 கி.மீ. தொலைவிலும், மேற்கே செங்கம் 43 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. 

 

மாநில நெடுஞ்சாலை - கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் சாலை,

மாநில நெடுஞ்சாலை - விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் - மங்களூரு சாலை,

மாநில நெடுஞ்சாலை - திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் சாலை,

மாவட்ட சாலை - கலசப்பாக்கம் - கடலாடி - புதுப்பாளையம் சாலை

ஆகிய சாலைகள் கலசப்பாக்கம் நகரின் வழியாக நகரத்தை இணைக்கிறது. 

 

வேலூர், ஆரணி, போளூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. துரிஞ்சிகுப்பம், அவலூர்பேட்டை, பாடகம், மங்கலம், ஆதமங்கலம்புதூர், பர்வதமலை, மன்சுராபாத் ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

 

கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

 கலசப்பாக்கம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை ஊராட்சியாகும். இந்த நகரை கலசப்பாக்கம் ஊராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது. 

 

கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் கலசப்பாக்கம் தொகுதி ஒன்றாகும். 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் கலசப்பாக்கம் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தை போளூர் வட்டத்தின் சில  பகுதிகளை கொண்டு 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 52 வருவாய் கிராமங்களும், 1,40,301 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும். இந்த வட்டத்தில்  கலசப்பாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய குறுவட்டங்கள் அமைந்துள்ளது.

 

 

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் கலசப்பாக்கம் வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம் மற்றும் , ஜமுனாமரத்தூர் வட்டத்தின் 112 ஊராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சி இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

கலசப்பாக்கம்  பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.

இங்கு மல்லிகார்ஜூனர் சாமி கோவில் உள்ளது. 

 

மேலும் படவேடு ரேணுகாம்பாள் கோவில், புதுப்பாளையம் ஒன்றியம் புதூர் மாரியம்மன் கோவில், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர்- மோட்டுர் பகுதியில் நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. கலசப்பாக்கம் அடுத்ததாக பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் ஆசிரமம் அமைந்துள்ளது.

 

 

கலசப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா மற்றும் மலைவாழ் மக்களின் நலன் கருதி ஜமுனாமரத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட்டது. பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

கலசபாக்கம் தாலுகாவில் உள்ள பழங்கோயில் கிராமத்தில்  பலக்ராதீஸ்வரர் கோயில் உள்ளது. 

மூலவர் பலக்ராதீஸ்வரர் என்றும், தாயார் பாலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். செய்யாற்றின் தென்கரையில் முருகப்பெருமான் நிறுவி வழிபட்ட சப்த கைலாய ஸ்தலங்களில் ஒன்றாக இக்கோயில் கருதப்படுகிறது. 

 

கையை இழந்த மன்னன் ஒருவன் இந்த சிவபெருமானை வேண்டி கையை மீட்டதாக கூறப்படுகிறது. அதனால், பக்தர்களுக்கு இழந்த சக்தியைத் திரும்பக் கொடுப்பதால், சிவபெருமான் பலக்ராதீஸ்வரர் என்று பெயர் பெற்றார். 

 

உடல் பலம் மன பலம் வேண்டி இங்கிருக்கும் ஈசனிடம் பிரார்த்தனை செய்தால் இறையருள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

 

நம் உடல் உறுப்புகளில் கை கால் மிக முக்கியமானது, அதில் விபத்துக்களால் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் இவ்வாலயம் வந்து பிரார்த்தனை செய்தால் குறைகள் நீங்கும் என நம்பப்படுகிறது 

 

கலசப்பாக்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலைநயமிக்க சிற்பவேலைபாடுகளுடன் கூடிய பழைமையும் பெருமையும் வாழ்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு கிழக்கு பார்த்தவாறு சிவபெருமான் அம்பாள் திரிபுர சுந்தரயுடன் திருமாமூடிஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை மனதார வேண்டி வணங்கினால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து திருப்பம் தருவார் திருமா மூடிஈஸ்வரர் என்பது இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். ஒரு சிலர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தும் பால் வழங்குகின்றனர். இங்கு தலவிருட்சமாக வில்வமும் தீர்த்தமாக குழந்தை முருகப்பெருமான் உருவாக்கிய (சேய்) செய்யாறுதிருமணத்தடைக்கு திருப்பம் தரும் திரிபுரசுந்தரிநீண்ட நாள் திருமணத்தடைப்பட்டு கொண்டு போகும் கன்னிப்பெண்கள் இந்த அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து நெய்விளக்கு ஏற்றினால் மண வாழ்க்கை விரைவில் கைகூடி திருப்பம் தருவாள்; அம்பாள் திரிபுரசுந்தரி மீது கன்னிப்பெண்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.கலசப்பாக்கம் அருகில் உள்ள மாம்பாக்கம் என்னும் ஊரில் மாவிலை ஒதுங்கியதால் மாம்பாக்கம் என்றும் பூனூல் ஒதுங்கியவூர் பூண்டி என்றும் கலசம் ஒதுங்கியவூர் கலசபாக்கம் என்று பெயர் வந்ததாக செவிவழி செய்தியாக உள்ளது.

 

-பாலசுந்தரராஜ் புதுக்கோட்டை