எங்கள் ஊர் குன்றத்தூர் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
குன்றத்தூர் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின், வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்.
குன்றத்தூர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். பெரியபுராணம் எனும் நூலை இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான வண்டலூர் - மீஞ்சூர் சாலை அமைந்துள்ளது.
குன்றத்தூர், காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 9 கி.மீ தொலைவில் உள்ள பல்லாவரம் தொடருந்து நிலையம் ஆகும். இதன் வடக்கே போரூர் 9.5 கி.மீ; தெற்கே தாம்பரம் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
9 ச.கி.மீ. பரப்பும், 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இந்த நகராட்சி, திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சி 54,986 மக்கள்தொகை கொண்டது.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பல்லாவரம் வட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர், 2019-இல் புதிதாக நிறுவப்பட்ட வருவாய் வட்டம் ஆகும்]இப்புதிய வட்டம் பல்லாவரம் வட்டத்தில் இருந்த குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 42 கிராம ஊராட்சிகளைக்கொண்டு நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் தலைமையிடம் குன்றத்தூர் பேரூராட்சியாகும்.
குன்றத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட திருநீர்மலை மெயின்ரோடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம் 05.01.2024 அன்று முதல் பயன்பாட்டில் உள்ளது.
குன்றத்துார் இப்பொழுது திருநாகேசுவரம், மணஞ்சேரி, நத்தம் என மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. திருநாகேசுவரம் என்பது சேக்கிழார் கட்டிய திருநாகேசுவரம் என்னும் சிவன் கோவிலை உடையது. அக்கோவிலின் பெயரே நாளடைவில் அதன் சுற்றுப்புற ஊரின் பகுதியைக் குறிக்கலாயிற்று. சோழ நாட்டில் இவ்வாறே ஒரு கோவிலின் பெயர் ஊரின் பெயராக விளங்குகிறது.
மணஞ்சேரி என்பது திருநாகேசுவரத்தை அடுத்து இருக்கும் பகுதி. அப்பகுதியில் மூன்று நான்கு தெருக்கள் இருக்கின்றன.
குன்றத்தூரைப் பற்றித் திருநாகேசுவரம் கோவிலிலும் நத்தம் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு சில செய்திகளை அறியலாம். ஏறக்குறையச் சேக்கிழார் காலத்தில் அவ்வூர் பெரிய நகரமாக இருந்தது. பல பெரிய தெருக்கள் இருந்தன. மாட மாளிகைகள் இருந்தன. கோவில்கள் நல்ல நிலையில் விளங்கின. திரு நாகேசுவரம் கோவிலில் தேவரடியார் பலர் இருந்து கோவில் பணிகளைச் செய்து வந்தனர்; இசையையும் நடனத்தையும் வளர்த்தனர். கோவிலை அடுத்து ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் சைவ அடியார்கள் தங்கியிருந்தனர். கோவிலை மேற்பார்க்க ஒரு சபையார் இருந்தனர்.
குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலை உடையது; செழுமையான வயல்களால் சூழப்பட்டது; சிறந்த மருத்துவர் ஒருவரைப் பெற்றிருந்தது. அம்மருத்துவர் குன்றத் தூரில் வைத்தியம் செய்து வந்தார். அந்த வைத்தியர் ஆசிரியராகவும் இருந்தார். அவரிடம் பலர் கல்வி பயின்றனர்.
குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் சைவத்திலும் வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்கள். அவர்கள் சேக்கிழார் கட்டிய சிவன் கோவிலுக்குப் பல தான தருமங்கள் செய்தனர்; பெருமாள் கோவிலையும் கவனித்து வந்தனர்.
குன்றத்தூர் அருகே சோமங்கலத்தில் அருள்மிகு காமாக்ஷி அம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இது சந்திரனுக்கு உரிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சந்திரனே இத்தலத்திலுள்ள ஈசனை பூஜித்து, தான் இழந்த கலையை மீண்டும் பெற்றதால் இவ்வூருக்குச் சோமங்கலம் என்ற பெயர் உண்டானது.
குன்றத்தூரில் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத திருநாகேஸ்வரர் கோயில் ராகு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் ராகு வழிப்பட்டதால் சிவபெருமானுக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்று பெயரானது. இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் சிறப்பாக செய்யப்படுகிறது. இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈஸ்வரன். இன்றும்கூட இரவு நேரத்தில் நாகங்கள் இறைவனை வழிபட வருவதாகக் கூறுகின்றனர்.
இத்தலத்தில் அமர்ந்திருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகவே காட்சி தருகிறார். ராகு காலத்தில் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்கிறார்கள்.
குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது.தமிழகத்தின் ஒருநாள் சிறப்பு தரிசன முறைகளில் இந்த சன்னதியும் ஒரு வரிசையில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் என்ற வரிசையில் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது.
சக்தி தேவியர் மூன்று திருநாமங்களுடன் ஒரே நேர்கோட்டில் 12 கி.மீ. தொலைவிற்குள் திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள் தருகின்றனர்.குன்றத்தூரில் முருகன் மலைக்கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் தார்சாலை ஓரத்திலும் திரு ஊரகப்பெருமாள் சன்னதிக்கு 20 அடி தூரத்திலும் இந்த ‘சக்தி கோவில்’ இருக்கிறது.
குன்றத்தூர் மலை மேல் இருக்கும் முருகப்பெருமான் பல்வேறு சிறப்புகளை உடையவர்.தமிழகத்தில் வடக்கு நோக்கிய முருகன் கோயில் இதுவே. இக்கோயில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், சுப்பிரமணியர் இரு தேவிகளுடன் இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு தேவியுடன் மட்டுமே தரிசிக்க முடியும்.
முருகன் திருப்போரூரில் இருந்து திருத்தணிகைக்கு தனது பயணத்தின் போது மலையில் தங்கினார் . சுப்பிரமணியர் வடக்கு நோக்கி, தணிகை நோக்கி காட்சியளிக்கும் இத்தலம் தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் பொ.ஊ. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. 1726-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் 900 ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபடுவதாக கூறப்படுகிறது.
குன்றத்தூர் மலையில் இருந்த முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். மலை அடிவாரத்தில் தனி கோவிலில் ‘கந்தழீஸ்வரர்’ உள்ளார்.
சேக்கிழார் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்ததுடன் திருப்பணிகளும் செய்துள்ளார். குன்றத்தூர் பகுதியில் 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சரவையில் முதல் அமைச்சராகப் பணியாற்றியவர். குலோத்துங்க சோழன் கேட்டுக் கொண்டதற்கிணங்க 63 நாயன்மார்கள் பற்றி அவர் 'பெரிய புராணம்' என்னும் நூலை இயற்றினார்
குன்றத்தூர் மலையடிவாரத்தில், ஊரகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
-குட்டி முத்துச்செல்வம் சிவகாமிபுரம்