tamilnadu epaper

எங்கள் ஊர் 'திருலோக்கி' சிறப்பு

எங்கள் ஊர் 'திருலோக்கி' சிறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் 

உள்ளது 'திருலோக்கி' கிராமம். திருவிடைமருதூர் சட்டமன்ற 

மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டது.

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 

மொத்த மக்கள் தொகை 3534 ஆகும். கும்பகோணத்தில் இருந்து 

இந்த ஊருக்கு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.  

திருப்பனந்தாளில் இருந்து இந்த ஊர் சுமார் 5 கி மீ தொலைவில் 

உள்ளது. முதலாம் ராஜ ராஜ சோழன் மனைவியான திரைலோக்கிய 

மாதேவியார் பெயரால் இந்த ஊர் மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய

திரைலோக்கிய மாதேவி சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் 

உள்ளது.  

 

 

விவசாயம் தான் இந்த ஊரில் பிரதானம். பெரும்பாலானோர் நெல் சாகுபடி 

செய்துள்ளனர். தற்போது பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

அருகில் மண்ணியாறு இருப்பதால் எங்கும் பசுமையான காட்சிகளை பார்க்கலாம். 

இந்த ஊரில் உள்ள பெரும்பான்மையான நிலங்கள் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு 

சொந்தமானது. காசி மடம் கிளை அலுவலகம் ஒன்று இங்குள்ளது. விவசாயம் 

தொடர்பான கணக்குகளை மணியம் திரு.இளங்கோவன் அவர்கள் 

பார்த்து வருகிறார். மடத்துக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளி ஒன்று 

உள்ளது. 

 

 

இந்த ஊரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் 

திருக்கோயில் உள்ளது. இங்கு குரு பகவானுக்கு ஈசன் அம்பாளுடன் 

ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இந்த ஊருக்கு ஏமநல்லூர் என்ற 

பெயரும் உண்டு. ஏமம் என்றால் பொன் என்று பொருள். குரு பகவானுக்கு 

பொன்னவன் என்ற பெயரும் உண்டு. குரு வணங்கிய தலம் ஆதலால் இந்த 

ஊருக்கு ஏமநல்லூர் என்ற பெயரும் உண்டு. முதலாம் ராஜ ராஜ சோழன் 

கட்டிய கோயில் இது. 

 

 

ஒரு சமயம் குரு பகவான் அறியாது செய்த பாவங்களுக்கு விமோசனம் வேண்டி 

பல தலங்களுக்கு சென்று சிவனை வழிபட்டார். அவர் திருவிடைமருதூர் வந்து 

மகாலிங்க சுவாமியை வழிபட்ட போது இறைவன் அவரை திருலோக்கி சென்று 

சுந்தரேஸ்வரரை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று சொன்னார்.

அதன்படி இந்த ஊருக்கு வந்த குரு பகவான் இறைவனுக்கு கொன்றை மாலை 

அணிவித்து முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி,

 தயிர் அன்னம் நிவேதனம் செய்து இறைவன் திருவருளை வேண்டினார். 

சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அன்னைஅகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் 

செய்தவாறு காட்சியளித்து பாவவிமோசனம் அளித்தார். ரிஷப வாகனத்தில் காட்சியளித்த 

உமாமகேஸ்வரர் வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத அற்புத வடிவமாகும்.

அவர்களை வணங்கியபடி குரு பகவான் வீற்றிருப்பார்.  

 

 

ஒருவரது ஜாதகத்தில் குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ அவர்கள் 

இங்கு வந்து இறைவனை வணங்கினால், சிவனருளோடு குருவருளையும் 

பெறலாம். வியாழக்கிழமை குரு ஓரையில் இங்கு வந்து சிவனை வணங்கினால்

குரு சம்பந்தமான தோஷங்கள் விலகிவிடும். இனிய இல்லற வாழ்க்கை அமையும் 

பாக்கியம் கிடைக்கும். 

 

 

பிரதோஷம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். இதர கோயில்களில் பிரதோஷ 

நாளில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனால் இந்த கோயிலில் 

நந்தியின் மேல் அமர்ந்திருக்கும் ஈசனுக்கும் அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் 

நடைபெறும் என்பது சிறப்பு. மேலும் இத்தலம் நித்ய பிரதோஷ ஸ்தலம் என்றும்

அழைக்கப்படுகிறது.

 

   

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகிய திருக்குறுக்கை  

(மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஊர்) என்ற திருத்தலத்தில் 

சிவபெருமானால் எரிக்கப்பட்டார் மன்மதன். தன் கணவருக்கு 

உயிர்ப்பிச்சை தருமாறு ரதிதேவி சிவனை வேண்ட, அவர் 

'திரைலோக்கி சுந்தரரை வணங்கி வழிபட்டால் உன் கணவன் 

உயிர் பெற்று வருவான்' என்று சொன்னார். அதன்படி இத்தலம்  

வந்த ரதிதேவி இறைவனை வணங்கி வழிபட மன்மதன் 

மீண்டும் உயிர் பெற்றார். பின்னர் இருவரும் சேர்ந்து இறைவனை 

வழிபட்டனர். மன்மதன் ரதி இருவரும் இணைந்து நிற்கும் சிற்பம் 

மூலவர் சந்நிதிக்கு முன்பு நமக்கு வலது பக்கத்தில் இருக்கும். 

மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலமாதலால் மாங்கல்ய தோஷ 

பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. தம்பதியர்கள் 

ஒற்றுமையாக வாழவும், திருமணத்தடை நீங்கவும் ரதி மன்மதனுக்கு 

அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் நல்லது நடக்கும்.  

பூஜைக்குரிய பொருட்களோடு கோயிலுக்கு சென்றால் இதரப் 

பொருட்களான ஜவ்வாது, அரகஜா ஆகியவற்றை கோயிலில் வாங்கிக் 

கொள்ளலாம். திரு.ஆலாலசுந்தர சிவாச்சாரியார் அவர்கள் ஆலய 

அர்ச்சகர். கோயிலுக்கு அருகாமையில் அவரது வீடு உள்ளது. தேவையான 

உதவிகளை அவர் செய்வார். அவரது மகன் திரு.அருண் தஞ்சை சாஸ்த்ரா 

நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். விடுமுறை 

நாட்களில் தந்தைக்கு உதவியாக கோயில் பூஜைகளையும் செய்து வருகிறார்.

 

 

இந்த ஊரில் கைலாசநாதர் திருக்கோயில் ஒன்று உள்ளது. முதலாம் ராஜேந்திர

சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. அம்மன்னன் கங்கை வரையில் படையெடுத்து சென்று

வெற்றி பெற்றதற்கான ஆதார கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது. 

சயன நாராயண பெருமாள் கோயில் இங்குள்ளது. திருப்பாற்கடலில் இருக்கும் 

கோலம் போலவே பெருமாள் இங்கு காட்சியளிப்பார். ஒரு கணம் கூட பிரியாமல் 

பெருமாள் நெஞ்சில் குடியிருக்க ஸ்ரீ லட்சுமி தவம் புரிந்தது இங்கு தான். 

 

 

சைவமும் வைணமும் சிறப்பாக இருக்கும் இந்த திருலோக்கி கிராமத்திற்கு 

வருகை தாருங்கள். வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று உயரலாம்.

                                        

திருமாளம் எஸ். பழனிவேல்