எங்கள் ஊர் தேனி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.தேனி நகரம் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது. இப்பகுதி சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு உட்பட பல வம்சங்களால் ஆளப்பட்டது.இந்நகரமானது மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 506 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் தேனி, அல்லி நகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன் பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில், இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லி நகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் தேனி-அல்லி நகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது.
பிறகு இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு முதல் நிலை நகராட்சியாகத் தரமுயர்த்தப்பட்டது. தற்போது 2023 -இல் இந்நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.
தேனி - அல்லி நகரம் நகராட்சி 33 நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான காமராசர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கம்பம், போடிநாயக்கனூர், கோட்டயம் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துநிலையத்திற்கு அதிகமான பேருந்துகள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, தேனி புறவழிச்சாலையில் கட்டி முடிக்கப்பட்டது. 2014ம் வருடத்திலிருந்து இப்புதிய பேருந்து நிலையம், 'கர்னல் பென்னிகுயிக் பேருந்து நிலையம்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
மதுரையிலிருந்து .- போடிநாயக்கனூர் செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது.
தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை சனிக்கிழமை கூடுகிறது.
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும். இது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை அணை உள்ளிட்ட ஆறுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு சுருளி அருவி,, கும்பக்கரை அருவி மற்றும் மேகமலை அருவி என பல பிரபலமான அருவிகள் உள்ளன. இது கொடைக்கானல், தேக்கடி, மேகமலை, மூணாறு, கும்பக்கரை, சோத்துப்பாறை
மற்றும் வைகை அணை போன்ற பல சுற்றுலா தலங்களால் சூழப்பட்டுள்ளது. தேனியின் அழகிய சூழல் நிலவுவதால், இது தமிழ் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாகும். தேக்கடி வனவிலங்கு சரணாலயமானது, கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் எல்லையில் அமைந்துள்ளது.
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை இம்மாவட்டத்தில் கொண்டாடப்படும், முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
தமிழ்நாட்டின் மிக அழகிய இடங்களில் ஒன்றான தேனி, பயணிகளுக்கு இயற்கை அழகு மற்றும் பேரின்பத்தின் புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
வசீகரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிழல்களில் அமைந்துள்ள தேனி, எந்தவொரு பயணியையும் அதன் உள்ளார்ந்த நற்பண்புகளால் கவர்ந்திழுக்கும்.
நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து நீங்கள் ஒரு சரியான இடைவெளியைத் தேடுகிறீர்களானால், தேனி உண்மையில் தேர்ந்தெடுக்க வேண்டிய இடமாகும்.
மலைகளின் கம்பீரத்தைப் பார்ப்பது மற்றும் இயற்கையின் மந்தமான தாளங்களைக் கேட்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இது இருக்கும்.
காபி மற்றும் தேயிலை தோட்டங்களுடன் ஏலக்காய் தோட்டங்களும் இவ்விடத்தின் செழுமையை அதிகரிக்கிறது.
கரும்பு, பருத்தி, தினை, நிலக்கடலை, திராட்சை, மாம்பழம் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது . முக்கியமான தொழில் இங்கு விவசாயமாகும்..மற்ற திராட்சை வளரும் நாடுகளைப் போலல்லாமல் ஆண்டு முழுவதும் இங்கு திராட்சை அறுவடை செய்யப்படுகிறது.
அவை கோடையில் தங்கள் வளர்பருவத்தை முடிக்கின்றன. பருத்தி நூற்பு ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகளும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன.
தேனி மாவட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்த ஏராளமான வன நிலங்கள் உள்ளன. மாவட்டத்தின் நிலப்பரப்பில் சுமார் 33.70% காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள காற்றின் தரமும் இயற்கையின் வசீகரமும் இணையற்றது என்பதில் வியப்பில்லை.
காடுகளின் ஆன்மா இந்த இடம் முழுவதும் பரவியிருக்கும்.ஒவ்வொரு இயற்கையான இடங்களிலும் அது பிரதிபலிக்கிறது. ஆற்றங்கரைகளில் இருந்து அருவிகள் மற்றும் அணைகள் முதல் மலைகள் வரை
விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்ல விரும்புவோர் முதலில் தேர்ந்தெடுப்பது தேனி மாவட்டமாகத்தான் இருக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களிலும் நிலவும் காலநிலை தேனியை சொர்க்கம் என்றே அழைக்க வைக்கும்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பச்சைப் பசேல் தேயிலை தோட்டங்கள், மலைகளின் மீது போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதி கண்களை வருடும்.
கேரள மாநிலம் மூணாறு, தேக்கடி, குமுளி போன்ற பகுதிகளுக்கும் தேனியை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் , கேரள மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வந்து செல்வர்.
தேனி மாவட்டத்தில் கேரளா எல்லையை ஒட்டி அமைந்து உள்ளது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி. கேரள மாநிலத்திற்கு மிக அருகில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி அமைந்து உள்ளதால் எப்போதும் குளுமையாகவே காணப்படும்.
தேனி மாவட்டம் கும்மி மற்றும் கரகாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளுக்குப் பெயர் பெற்றது. இந்த நடனங்கள் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது நிகழ்த்தப்படுகின்றன. நாதஸ்வரம் மற்றும் தவில் போன்ற பாரம்பரிய இசைக்காகவும் இந்த மாவட்டம் அறியப்படுகிறது.
தேனி இடியப்பம், அப்பம், கொழுக்கட்டை போன்ற உணவுகளை உள்ளடக்கிய பாரம்பரிய உணவு வகைகளுக்கும் இப்பகுதி பெயர் பெற்றது. இந்த மாவட்டம் அதன் உணவு வகைகளில் மசாலா மற்றும் மூலிகைகள் பயன்படுத்துவதற்கும் பெயர் பெற்றது.
பருத்தி நூற்பாலைகள், சர்க்கரை ஆலைகள் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில்களாகும். ஆண்டிபட்டி தாலுகாவில் கைத்தறி நெசவு மற்றும் விசைத்தறியும் செழித்து வருகிறது. உத்தமபாளையம் தாலுகாவில், தேயிலை உற்பத்தியில், ‘ஹைவாவிஸ் எஸ்டேட்’ முக்கியப் பங்கு வகிக்கிறது. இம்மாவட்டத்தில் பெரியாறு, சுருளியாறு மற்றும் வைகை நுண் நீர்மின் நிலையம் ஆகிய மூன்று நீர் மின் நிலையத் திட்டங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்), நடிகர் முத்துராமன் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் லெனின் பாரதி ,செல்வராகவன் சிராஜ் மற்றும் பொன்ராம் இயக்குனர்களாகவும், இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து சி. சு. செல்லப்பா, வே. தில்லைநாயகம், கவிஞர் வைரமுத்து,கவிஞர் நா.காமராசன், கவிஞர் மு.மேத்தா, உமா மகேஸ்வரி, கவிஞர் சக்தி ஜோதி, தேனி மு. சுப்பிரமணி, தேனி எஸ் முருகேசன் மற்றும் எஸ்.மாரியப்பன் என்று பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர்.
-லட்சுமணன் சத்திரப்பட்டி