tamilnadu epaper

எங்கள் ஊர் மன்னார்குடி சிறப்பு

எங்கள் ஊர் மன்னார்குடி சிறப்பு

வேதாரண்யம் விளக்கழகு

திருவாரூர் தேரழகு

மன்னார்குடி மதிலழகு

 

ராஜேந்திர சோழனின் மகன் இராஜாதி ராஜ சோழனால் ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஊர் தான் மன்னார்குடி.

 

மன்னார்குடியின் வரலாற்றுப் பெயர்கள்

1, ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம்

2, குலோத்துங்க சோழ விண்ணகரம்

3, ராஜேந்திர சோழ விண்ணகரம்

4, மன்னார் கோயில்

5, செண்பகாரண்யா ஷேத்திரம்

6, சுத்தவல்லி வளநாடு

7, வண்டுவராபதி

8, வாசுதேவபுரி

9, தட்சிண துவாரகை

 

ஸ்ரீராஜகோபாலசுவாமி ஒரு வைணவக் கோயில் ஆகும். இந்தக் கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குருவாயூரைச் சேர்த்து இக்கோயிலையும் தட்சிண துவாரகை(தென் துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.

ராஜ கோபுரம்: 154 அடி

மூலவர்: வாசுதேவப் பெருமாள்

தாயார்: செங்கமலத்தாயார்

திருவுருவம் உயரம்: 12 அடி

கோயில் வளாகத்தில் 16 கோபுரங்கள்

24 சன்னிதிகள்

ஏழு மண்டபங்கள்

9 புனித தீர்த்தங்கள்

தீர்த்தம்: ஹரித்ரா நதி

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய குளங்களுள் ஒன்றான ஹரித்ரா நதி 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் குளம் 1158 அடி நீளமும். 84 அடி அகலமும் உடையது.

 

“கோயில் பாதி குளம் பாதி கொண்ட மன்னார்குடி” எனும் முதுமொழிக்கு ஏற்ப சுமார் 100க்கும் மேற்பட்ட குளங்கள் மன்னையில் இருந்துள்ளது. இதன் மூலம் நீர் மேலாண்மை பற்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்னமே போதுமான அறிவும் விழிப்புணர்வும் கொண்ட மேலான சமூகமாக மக்கள் விளங்கியதை அறிந்துகொள்ள முடிகிறது.

 

1886ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மன்னார்குடி நகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. மன்னார்குடி நகராட்சியாக அறிவிக்கப்பட்டு 154 வருடங்களுக்கு மேலாகிறது. மன்னார்குடி தொடக்க காலத்திலிருந்தே கல்வி்க்கு முன்னுரிமை கொடுத்து வந்துள்ளது. அதற்குச் சான்றாக 170 ஆண்டுகள் பழமையான பின்லே மேல்நிலைப்பள்ளியும், 125 ஆண்டுகள் பழமையான தேசிய மேல்நிலைப்பள்ளியும் இங்கு அமைந்துள்ளது. இன்று சுமார் 95 சதவீத கல்வி வளர்ச்சியை மன்னார்குடி எட்டியுள்ளது.

 

பங்குனி மாதத்தில் 18 நாள் திருவிழா வெகுவிமரிசையாக இங்கு நடைபெறும். மன்னார்குடியின் ஜீவாதாரம் விவசாயம். கலையும் மேதமையும் நிறைந்த பூமி இது. எழுத்துக்கு கரிச்சான் குஞ்சு, நாதஸ்வரத்துக்கு சின்னபக்கிரி, தவிலுக்கு ராஜகோபால் பிள்ளை, கொன்னக் கோலுக்கு நடேசன்பிள்ளை, கோட்டு வாத்தியத்துக்கு சாவித்திரி அம்மாள், நடிப்புக்கு மனோரமா ஆச்சி என மன்னை மண்ணின் கலைஞர்களை சொல்லிக் கொண்டே போகலாம். மன்னார்குடிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தெப்பக்குளம் அருகே ஜைன கோயில் தெருவில் மல்லிநாதசுவாமி ஜினாலயம் அமைந்துள்ளது. இவர் சமண சமயத்தின் 19ஆவது தீர்த்தங்கரர் ஆவார். மன்னார்குடிக்கு அருகில் பாமணியில் அமைந்துள்ள சிவாலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். கைலாசநாதர், அண்ணாமலைநாதர், நீலகண்டேஸ்வர், ஜெயங்கொண்டநாதர், ஏகாம்பரேஸ்வர் என பெரியகோவிலைச் சுற்றி 8 சிவாலங்கள் உள்ளன.