புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை சாலையில் உள்ள மீன்பிடி தளங்கள் கொண்ட ஊர்களில் ஒன்று மீமிசல் .புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மீமிசல் ஊராட்சி கடற்கரை கிராமம்.
இங்கு மீனவர் சமுதாயத்தினர் பெரும்பான்மை கொண்ட ஊர். இங்குள்ள மீமிசல் கல்யாண ராமர் கோவில் சிறப்பான ஸ்தலம் .இங்கு உள்ள மீனவ சமுதாயத்தினர் தங்களுக்கும் தங்கள் தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க கல்யாண ராமரை வழிபாடு செய்கின்றனர் .நாக தோஷம் ,செவ்வாய் தோஷம் ,கார்கோடக தோஷம் ,மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் இங்கு நடக்கிறது .இதற்காக பக்தர்கள் மீமிசல் கடலில் குளித்துவிட்டு கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியில் குளித்து ஈரத்துடன் கல்யாண ராமர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது.
இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் ராமர் கோவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சீதை லட்சுமணர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார் .இதே வடிவிலும் உற்சவமூர்த்திகள் காணப்படுகின்றனர்.
சனி பிரதிஷ்டை :
ஆஞ்சநேயர் சீதையை மீட்கும் போது ராவணங்களுடன் ஏற்பட்ட போரில் லட்சுமணன் மயக்கம் அடைந்து விட்டார் .அவருக்கு மயக்கம் தெளிவிக்க மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவி மலையை எடுத்து வர ஆஞ்சநேயர் சென்றார் .மலையை எடுத்து வரும் வழியில் சனி பகவான் ஆஞ்சநேயரிடம் "உன்னை பிடிக்க வேண்டிய காலகட்டம் வந்ததால் உன் சரீரத்தை பிடிக்க அனுமதிக்க வேண்டும்" என்றார். "என்னுடைய காலை பிடித்துக் கொள்" என்று ஆஞ்சநேயர் கூறியதால் ..அவருடைய காலை சனிபகவான் பற்றிக் கொண்டார். இதனால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனியின் பார்வையின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு கேதுவின் தானியமான கருப்பு உளுந்தை "முகுந்தமாலா" என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவுக்கு பிரசாதமாக தருகின்றனர். 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலமாக குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தான கிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர் .அதை மடியில் வைத்திருக்கும் பக்தர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும் போது விக்கிரகத்தை கோவிலில் வழங்கி விட்டு செல்கின்றனர் .இவ்வாறு சந்தானகிருஷ்ணனை மடியில் சுமப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இலங்கையில் இருந்து சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராமன் லட்சுமணன் சென்றனர் .அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அந்தப் பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தார்கள் .இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும்போது மீமிசலில் திருமண கோலத்தில் ராமர் சீதை ஆகியோரோடு லட்சுமணனும் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் இப்போது இருக்கும் கல்யாண ராமர் கோவில் கட்டி திருப்பணிகள் செய்தார்.
மீமிசல் கிராமம் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்கும் ஒரு கடற்கரை கிராமமாக மட்டுமல்லாமல் ஆன்மீகத்தை வளர்த்தெடுக்கும் கல்யாண ராமர் கோவில் சிறப்போடு மிளிர்கின்ற அழகான கடற்கரை கிராமமாகும் .இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை ரசிப்பதோடு கல்யாண ராமரை வழிபட்டு செல்கின்றனர்.
கட்டுரை எழுதியவர்:கவி-வெண்ணிலவன்,மணமேல்குட