காரப்பங்காடு
ஸ்ரீ பூமிநீளா ஸ்ரீபெருந்தேவி நாயிகா சமேத
ஸ்ரீ தேவப்பெருமாள் என்கிற
ஸ்ரீ அபீஷ்டவரதராஜ பெருமாள் கோயில்
காரப்பங்காடு சோழவள நாட்டில் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள இராஜமன்னார்குடிக்கு ஸமீபத்தில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு திவ்யதேசம். இந்தப் பகுதியில் பஞ்சக்ராமம் என்று சொல்லக்கூடிய ஐந்து கிராமங்களுக்கும் சிகரமாகும் முதன்மையாகவும் ப்ரதானமாகவும் உள்ள திவ்யதேசம்.
பல ஞானிகளையும் மஹான்களையும்
வித்வான்களையும் தர்மசாஸ்திர
நிபுணர்களையும் சாஸ்திரபண்டிதர்களையும்
காலக்ஷேப அதிகாரிகளையும் போன்ற பல மஹா பாகவதோத்தமர்கள் அவதரித்த ஸ்தலமாகையால் இந்த காரப்பங்காடு திவ்யதேசமாகவே போற்றப்பட்டு வருகிறது.
காரப்பங்காட்டின் வேறு திருநாமங்கள்
1. தக்ஷிணநைமிசாரண்யம்
2. கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்
3. நீலாம்புதவனம்
இச்க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு
ஸ்ரீ அபீஷ்டவரதன் என்று திருநாமம். தாயார் ஸ்ரீ பெருந்தேவி தாயார். (மஹாலக்ஷ்மிக்கு பெருந்தேவி என்று மறுபெயர் உண்டு (மஹா ------- பெரியது
லக்ஷ்மி ------தேவி) மஹாலக்ஷ்மி----பெருந்தேவி)
தீர்த்தம் ----- வரதபுஷ்கரணி
விமானம்----- புண்யகோடிவிமானம்
ஸ்தலவிருட்சம் ----பாதிரி மரம்
இவருடைய வேறு திருநாமங்கள்
1. உச்சிஷ்டவரதன்
2.தேவாதிராஜன்
3. பேரருளாளன்
4..அடியாற்கடியான்
5. பாட்டு கேட்க வந்த பெருமாள்.
இதில் அடியாற்கடியான் என்ற
திருநாமத்தின் பெருமை என்னவெனில் ஸேது யாத்திரை சென்று வந்த ஸப்தகோத்ரிகளான மஹான்கள் இந்த ஸ்தலத்தில் தங்கி அருளிச் செயல் அனுஸந்தித்து வந்ததும், அவர்களுடைய குறை காஞ்சி வரதனை நினைத்து அவன் நினைவிலேயே காலத்தைப் போக்குவதை பகவான் அறிந்து வருந்தி இவர்கள் இருக்கும் இடத்திற்கே தான் மனமுவந்து எழுந்தருளி தேவை ஸாதித்து தமிழ் பாசுரம் கேட்ட பெருமையால் அடியாற்கடியான் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இக்கோயிலில் நடக்கும் உத்ஸவங்கள்
சித்திரை - எம்பெருமானார் உத்ஸவம்
வைகாசி - நம்மாழ்வார் உத்ஸவம் மற்றும் பிரம்மோற்சவம்
ஆடி - ஜேஷ்டாபிக்ஷேகம்,திருவாடிப்பூரம் உத்ஸவம் மற்றும் வெள்ளிக் கிழமைகள்
ஆவணி - உறியடி உத்ஸவம்
புரட்டாசி - பவித்ரோத்ஸவம் மற்றும் நவராத்திரி
ஐப்பசி - மணவாளமாமுனிகள் உத்ஸவம்
கார்த்திகை - திருமங்கையாழ்வார் உத்ஸவம்
மார்கழி - திருஅத்யனோத்ஸவம்
தை - மட்டையடி , ஏகசிம்மாசனம் மற்றும் வெள்ளிக்கிழமைகள்
மாசி - டோலோத்ஸவம் மற்றும் தெப்போத்ஸவம்
பங்குனி - பங்குனி உத்திரம்
இச்க்ஷேத்திரத்தில் அவதரித்த மஹான்கள்
ஸ்ரீ சிங்கப்பெருமாள் ஸ்வாமி
ஸ்ரீ தேசிக வரதாச்சாரியார் ஸ்வாமி
ஸ்ரீ வெங்கிடாச்சாரியர் ஸ்வாமி
சிறப்பம்சம்
106 திவ்யதேச யாத்திரை செய்து பகவானை சேவித்திருந்தாலும் இந்த காடு - கரை சென்று சேவித்தால் தான் அந்த யாத்திரை பலப்ராப்தியாகும்.
இந்த காட்டிற்கு(கார்-அப்பன்-காடு) வந்தால் கரை ஏறுவது திண்ணம். அனுக்ரஹம் பெறுவது நிச்சயம். ஆகவே அனைவரும் காரப்பங்காட்டிற்கு அடிக்கடி வந்து நமது வரங்களை அள்ளிக் கொடுக்கும் அபீஷ்டவரதனை சேவித்து பயன் பெறுவோம்.
திருமதி. சுஜாதா சீனிவாசன்
ஸ்ரீரங்கம்