எங்களுடைய குலதெய்வம் அழகு பரிமணசுவாமி முசிறி அருகில் மேட்டுப்பாளையம், கோனங்கிப்பட்டி ஊரில் எழுந்தருளி இருக்கிறார். அழகு பரிமணசுவாமி, பேச்சு வழக்கில் பரிமளராயர் எனவும் வழங்கப்படுகிறார்.
இக் கோவிலில் மூலவர் அருள்மிகு பெரிய காண்டி அம்மன் ஆகும். குலதெய்வமாக வணங்கும் அருள்மிகு அழகு பரிமணசுவாமிக்கு தனி ஸ்தானம் அமையப் பெற்று அருள் பாலிக்கின்றார்.
பரிவார சுவாமிகள் நிறைந்துள்ள இக் கோவிலில் மந்திரமகாமுனி 20 அடிகள் உயர சிலைவடிவில் பிரம்மாண்டாக காட்சியளிக்கிறார். பூமாலையும் பல வேஷ்டிகள் இணைத்து அங்கவஸ்தரமாக அணிவிக்கப் படுவதும் கண்கொள்ளா காட்சியாய் இருக்கும். சுற்றுப் பிரகாரத்தில் சின்ன சின்ன கோவில்களாக, வையமலை சாம்பவான், மாசி பெரியண்ணன், சாமி முத்தையன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இக் கோவில் பழைமை மாறாமல், முகப்பு வாயில் ஒன்றும், பக்கவாட்டில் ஒரு வாயிலுடனும் அமைந்துள்ளது. ஓடுகள் வேயப் பட்ட இரு திண்ணைகள் பக்கவாட்டு முகப்பில் உள்ளன. பக்தர்கள் தற்காலிகமாக தங்குமிடம், நிரந்தர தண்ணீர் ஆகிய வசதிகளை மிகச் சிறப்பாக கோவிலின் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
ஆண்டுக்கு மூன்று சிறப்பு நாட்களாக சிவன்ராத்திரி, ஆடி பதினெட்டு, திருக்கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப் படுகிறது.
சிவராத்திரியின் பொழுது பெரிய காண்டிஅம்மனுக்கும் மற்றும் அழகு பரிமணசுவாமிக்கும் அலங்காரங்கள் கண்கவர செய்யப்படும். அருள்மிகு பரிமளராயரை குலதெய்வாக கொண்டுள்ளவர்கள், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் விஜயவாடா, டெல்லி, பெங்களூரு ஆகிய வெளிமாநில ஊர்களிலிருந்தும் தவறாமல் வந்து பூசைகளில் கலந்த கொள்வார்கள். அன்று நாள் முழுதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இக் கோவிலில் வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அழகு பரிமண சுவாமிக்கு 'அடசல் பூசை' நடைபெறும். அவ்வமயம் பக்தர்கள் கோயிலுக்கு நேர்த்திவிடும் கடா, ஆடு, கோழி இவை பலியிடப் பட்டு பூசைகள் ஆகும்.
ராத்திரி வெளியே வரும் அழகு பரிமண சுவாமிக்கு கீற்றோலை மறைப்பில் அசைவ உணவு படைக்கப்படும். இரண்டு முழு வாழை இலைகளில் நிறைய சூடாக படைக்கப்படும் உணவு. அனைத்தையும் சுவாமி உண்ணும் நேரம் குறைவுதான். பிறகு, சுவாமி உண்டதில் இலையில் மீதியிருக்கும் உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அப்பிரசாதம் அருந்த நோய்கள் நீங்கி பக்தர்கள் நலம் பெறுவர் என்பது ஐதீகம்.
இக்கோயிலின் புனரமைப்பு செய்யப்பட, கும்பாபிஷேகம் இவ்வாண்டு மாசி மாதமும், 'பெரும் பூஜை' எனும் விஷேசம் வைகாசி மாதமும் நடைபெற உள்ளதாகும்.
இத்தலம் துறையூரிலிருந்து 30 கி.மீ, முசிறியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. திருச்சி மற்றும் சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. அருள்மிகு பெரிய காண்டி அம்மன் மற்றும் அருள்மிகு அழகு பரிமணசுவாமிகளை வணங்கி வழிபட்டு பக்தர்கள் எல்லா நன்மைகளும் அடைவீர்களாக..!
- துரை சேகர்
கோவை.