கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளி உள்ள திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் என்றும் தலபுராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது .
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்திற்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலம் இதுவே. இந்திரன் இங்கு வந்து விமோசனம் பெற்றதால் கோரம் ஆகிய உடல் தூய்மையாகவும், அழகாகவும் மாறினான். ‘சுசி’ என்றால் தூய்மை என்று பொருள். இவ்விடம் சுசீந்திரம், சுசி+ இந்திரன் = சுசீந்திரம். என்பது மருவி, சுசீந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே முன்னொரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இது அடர்ந்த வனம் நிறைந்த பகுதியாக இருந்தது . இந்த வனத்தில் ஒரு பகுதியில், ஆசிரமம் அமைத்து அத்திரி மகரிஷி தன்னுடைய தர்மபத்தினியான, அனுசூயாதேவி உடன் வாழ்ந்து வந்தார்.
அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணிய சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில், துறவிகள் போல் வேடமணிந்து ஆசிரமத்திற்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். உடனே அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியினால், அறுசுவை உணவுகளை தயாரித்தாள், துறவிகளை, ஆசனம் அமைத்து அமரச்செய்தாள். விருந்து பரிமாற வந்தபோது, துறவிகள் மூவரும் எழுந்து விட்டனர். நான் என்ன தவறு செய்துவிட்டேன், என்று தேவியானவள் அழுதுகொண்டே கேட்டாள். அதற்கு, துறவிகள் மழை இல்லாத காரணத்தினால் ஒரு மண்டலம் உணவு இல்லாமல் வருந்திய நாங்கள் உணவு உண்ண வேண்டுமென்றால், அதற்கு ஒரு நோன்பு உண்டு அந்த நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக் கூடாது என்றனர். மேலும் நீங்கள் பிறந்த மேனியுடன் அன்னம் பரிமாறினால் உணவை உண்ணுவோம் என்றதும், திடுக்கிட்ட அனுசூயாதேவி, கணவனே கண்கண்ட கடவுள் என்றும், கற்பினை நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையை முனிவர் கூறியவாறே அமுது படைப்பேன் என்று நினைத்துக் கொண்டு தன் கணவர் காலை கழுவி வைத்திருந்த தீர்த்தத்தை கையிலெடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு, இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவர் என்று கூறி அத்துறவிகளின் தலையில் தெளித்தார். ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில் செய்யும் மும்மூர்த்திகளும் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் ஆனார்கள்.
பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து உணவு ஊட்டினாள் அனுசூயாதேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதை கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும், ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறும், இவர்களை மன்னித்து சுய உருவை அடைய வைக்குமாறும், அனுசூயாதேவியிடம் வேண்டிக்கொள்ள, மூன்று குழந்தைகளுக்கும் சுய உருவை அளித்தாள் . அப்போது திரும்பி வந்த அத்திரி மகரிஷி அனுசூயா தேவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளின் காட்சியை பெற்றார். மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த இடம் இத்தலத்திலுள்ள கொன்றை மரத்தடியில். பின்பு மும்மூர்த்திகளும் சிவன் (தாணு) விஷ்ணு(மால்) பிரம்மா (அயன்) என்ற பெயரில் இங்கு எழுந்தருளினார்கள்.
சன்னதிகள்
இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன.
இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
திருநெல்வேலியிலிருந்து 70 கிமீ தூரத்தில் சுசீந்திரம் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.
கீதா ராஜா திருவான்மியூர்