அவளுக்கு அவனுடன் பேசும்போது ஏதோ ஒன்று தோன்றும். இனம் புரியாத சந்தோஷம். அந்த நினைவிலேயே மூழ்கி போவாள்.
அந்த பத்து வயது பாலகன் தன்னை ஏன் இப்படி கட்டிப் போட வேண்டும்? தான் எதற்காக உடல் உணர்வு போங்க அவனிடம் வாஞ்சை கொள்ள வேண்டும்?
புரியாத புதிர் தான். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே? அந்த ஆட்டமோ?
பத்து வருடங்களுக்கு முன் அனிதா தான் ஒருவனை காதலிப்பதாக வீட்டில் சொல்ல பெற்றோர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு.
வழக்கமான வசவுகள். கல்லூரி படிப்பு கடைசி செமஸ்டர் என்பதால் மாமன், அண்ணன் பாதுகாப்போடு கல்லூரி சென்று வந்தாள்.
ரிசல்ட் வந்ததும் கேம்பஸில் உத்தியோகம் கிடைத்தது. அனிதா தனது முடிவில் உறுதியாய் இருந்தாள்.
திருமணப் பேச்சு எடுத்ததும் ஒரே பிடிவாதத்தில் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாள்.
உறவினர்கள் நண்பர்கள் முன்னாள் மிக அவமானமானது. திருமணம் செய்து கொண்டு போனவள் வரவே இல்லை. வருவதை இவர்களும் விரும்பவில்லை.
திருமணமான இரண்டாம் வருடம் அனிதாவும் அர்ஜுனும் ஒரு அழகான ஆண் குழந்தை வரவால் திக்கு முக்காடி போயிருந்தனர்.
எங்கிருந்தோ வந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக சிவனடி சேர்ந்தனர். ஆஸ்பத்திரி ரெக்கார்டுகளுடன் குழந்தை இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு இன்று இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.
மகன் வயிற்று பேத்தியை பள்ளிக்கு அழைத்து வரும் போதெல்லாம் எத்தனையோ குழந்தைகளில் இவன் மட்டும் மரகதத்தின் மனம் புகுந்தான்.
விசாரித்த போது எல்லா உண்மைகளும் தெரியவந்தது. பேரன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். கனத்த இதயத்துடன் அனிதா ஆகாஷின் இழப்பு குடும்பத்தாரை கலங்கச் செய்தது.
இதோ பேரன் தாத்தா பாட்டி, மாமா மாமி உறவுகளுடன் சேர்ந்து பாச மழையில் நனைந்து சிரிக்கிறான்.
வறட்டு பிடிவாதம் பிள்ளைகளுக்கும் இருக்கிறது. பெற்றோருக்கும் இருக்கிறது. ஆனால் ஆகாஷ் போன்ற குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
-வி. பிரபாவதி
மடிப்பாக்கம்