பாரதிக்கு சந்தியா எனும் ஒரே ஒரு பெண் குழந்தை தான்.
அதனால் பாரதியும் அவன் மனைவியும் அவளை எல்லாம் தெரிந்தவளாக வளர்க்க ஆசைப்பட்டனர்.
ஒரு பெரிய தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சந்தியாவை முதல் மாணவியாக ஆக்குவதற்கு பாரதியும் அவன் மனைவியும் பெருமுயற்சி எடுத்து பள்ளி விட்டு வந்தவுடனேயே பள்ளிபாடத்தை சரிபார்த்து வீட்டுப் பாடத்தையும் உடனே செய்யப் பழக்கப்படுத்தினர். சந்தியாவும் விளையாட
நினைத்தாலும் பெற்றோரின் வற்புறுத்தலால் படிக்கவும் செய்தாள்.
சிலசமயம் பாடம் படிக்கவில்லை என்றால்
அம்மாவின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறாள் சந்தியா.
மற்ற பிள்ளைகளைப் போல படிக்க வேண்டும் என்று அவர்களோடு கம்பேர் பண்ணி போட்டி போட்டு படிப்பு ஒன்றே குறியாக இருக்குமாறு
சந்தியா வளர்க்கப்பட்டாள்.
ஆனால் மற்ற பக்கத்து வீட்டு பிள்ளைகள் எல்லாம் விடுமுறை நாட்களில் வெளியூர் சுற்றுப்பயணத்திற்கும
சொந்த பந்தங்கள் வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தியா விரும்பினாலும்
அம்மா மிகவும் கண்டிப்பாக வளர்த்தாள்.
ஒருவழியாக இரண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு
முடிந்து கோடை விடுமுறை வந்தது. மற்ற
பக்கத்து வீட்டு குழந்தைகள் எல்லாம் அவரவர் சொந்த ஊருக்கும், சுற்றிப் பார்க்க வெளியூருக்கும்
பறந்தனர்.
ஆனால் அப்போதும் சந்தியா வுக்கு கராத்தே, சிலம்பம்
பரதம் வகுப்பு என தொடர்ந்து சிறப்பு வகுப்புக்கு அனுப்பட்டு
அதை ஒரு ஆர்வமாகவும்
கற்று பல பரிசுகளும் வாங்கி வந்து பெற்றோரை சந்தோஷப்படுத்தினாள்.
இந்தி போன்ற மொழிகளை மறந்து விடாமல் இருக்க தனி வகுப்புக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் பாரதி சந்தியாவை
அழைத்துச் சென்று பிறகு அழைத்து வருவார்.
கிடைக்கிற நேரங்களில் ஓவியம் வரைய சந்தியா அம்மாவே கற்றுக் கொடுத்தாள். அதிலும் இரண்டாவது பரிசை
வென்றாள்.
எல்லாவற்றையும் உடனே கற்றுக்கொண்டு
திறமைகளை வளர்த்தது கண்டு சந்தியாவின் அப்பாவும் அம்மாவும் பூரித்துப் போயினர்.
உறவினர்கள் சந்தியாவைப் பார்க்க வந்தாலும் அவர்களோடு
அதிகம் பேசாமல் தனித்தே ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள் சந்தியா. ஏனெனில் அவளுக்கு எந்த சொந்தக்காரர்களையும் தெரியாது. யார் வீட்டிற்கும் அவள் அம்மாவோ அப்பாவோ அழைத்துச் சென்றதில்லை.
கோடை விடுமுறைக்கு நிறைய சொந்தங்கள் வந்து வீடே களை கட்டினாலும் சந்தியா வயது குழந்தைகளிடம் கூட விளையாடாமல் தனியாக அமர்ந்து டி. வி
பார்த்தாள். அவர்கள் அனைவரும் சந்தியா வுக்கு புதியவர்களாகவே தெரிந்ததால் சந்தியாவால் நெருங்கி விளையாட ஆர்வப்படாமல் ஒதுங்கி யிருந்ததைப் பார்த்த பாரதியும் அவன் மனைவியும் ஒன்றும் புரியாமல் கவலை முகத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
இதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த சந்தியாவின் தாத்தா முறையுள்ள ஒருவர் சந்தியாவை அவள் போக்கிலேயே மெல்ல மெல்ல பேசியும் , விளையாட்டு காட்டியும், செல்போனில் ரய்ம்ஸ் பாட்டு வைத்துக் காட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தியாவின் ஃபிரண்ட் ஆனார்.
தினமும் அவளுக்குக் கதைகள் சொல்லி சாப்பாடு ஊட்டி விட்டார்.
ஒருநாள் தாத்தா, பாரதியை தனியே அழைத்து,
"என்ன பாரதி! பேத்தி சந்தியா நன்றாகப் படிக்கிறாளா?"
என்று கேட்டார்.
"நல்லாப் படிப்பா! கிளாஸ்ல இவதான் ஃபர்ஸ்ட்!"
"படிப்பு தவிர வேறு என்னென்ன விஷயங்கள் அவளுக்குத் தெரியும் ?"
எனத் தாத்தா கேட்டதற்கு
"சந்தியா ஓவியம், சிலம்பம், இந்தி மற்றும் இங்கிலீஷ், ஸ்போர்ட்ஸ் என எல்லாமுமே தெரியும். அந்த அளவுக்கு நான் டிரெயின் பண்ணியிருக்கேன்!" என்றான் சந்தோஷம் பொங்க!
"அதெல்லாம் சரி! நாங்கள் எல்லாம் அவளுக்கு என்னென்ன உறவுமுறை ன்னு தெரியுமா?
உனக்கு அவள் ஒரே குழந்தை! அவளுக்கு மற்ற சொந்த பந்தங்கள் வேண்டாமா? உன் காலத்திற்குப் பிறகு அவளுக்கு நல்லது, கெட்டது உற்றார், உறவினர்கள் துணை தேவைப்படாதா?
கல்வி மற்றும் பிற கலைகள் கற்றுக் கொடுத்ததை மட்டும் வைத்துக் கொண்டு அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நீ எப்படி பெருமைப்படலாம்?
அவளை நான்கு சுவருக்குள்ளேயே வளர்த்தால் நாளைக்கு திடீரென்று வெளியே போகவேண்டிவந்தால் நாலு இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்றால் தான் பொதுஅறிவு வளரும்.
நாலு பேரின் நட்பு கிடைக்கும்.
படிப்பு, ஒழுக்கம் இவைபோல அனுபவமும் ஒருவருக்கு ரொம்ப முக்கியம்.
அவளாக சிலவற்றைத் தெரிந்து கொள்ளட்டும்.
அதுவும் உன் துணையோடுதான்!
உட்கார்ந்து அரைமணி நேரம் படித்தால் ஒரு மணி நேரம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு
ஓடி விளையாடி பழகவிடு!
அவளாகவே ஏதாவது புரியவில்லை என்றால் உன்னிடம் சந்தேகம் கேட்பாள். அதை நீ விளக்கி, தெளியவைத்து விடு! சந்தியாவோடு நீயும் உன் மனைவியும் அதிக நேரம் விளையாடி பொது விஷயங்களைப் பேசுங்கள். பள்ளி முடிந்து ஒவ்வொரு நாளும் அவள் வரும்போதும் அவளிடம் பள்ளியில் நடந்தவற்றைக் கேளுங்கள்!" என்று தாத்தா சொன்னதைக் கேட்டு உடனே செயல்படுத்த உறுதி ஏற்றார் பாரதி மனதில்.
-பிரபாகர்சுப்பையா,
மதுரை 12.