tamilnadu epaper

ஒப்பீடு

ஒப்பீடு


இன்று காலை நடை பயிற்சியின்போது எனது நெடுநாளைய தோழியின் வீடு போகும் வழியில் இருந்ததால் நுழையலாம் என்று முடிவு செய்தேன். அவளது மூன்று பேத்திகளும் அங்கிருந்ததால் மூன்று விதமான பரிசுகளை வாங்கி சென்றேன். ஏனெனில் மூன்று பேரும் வேறு வேறு வயதை சேர்ந்தவர்கள்.  


பயிற்சியை முடித்து சுபா வீட்டிற்குள் நுழைந்தேன். என்னை பார்த்தவுடனேயே ஓடி வந்து கட்டிக் கொண்டாள். பிறகு நான் நடை பயிற்சிக்கு பின் என்னை சிறிது ஆஸ்வாசம் செய்வதற்குள் சூடான காபி ஒன்றை கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிடும்போதே அவளது கணவரும் வர, நாங்கள் மூவரும் அரட்டையை ஆரம்பித்தோம்.  


பத்து நிமிடங்கள் சென்றன. ஆர்னா, அதிதி, அபூர்வா என்ற மூன்று பேத்திகளும் அரட்டை சத்தம் கேட்டு ஓடி வந்தனர். மூன்று பேருக்கும் அவர்கள் வளர்ச்சிக்கேற்ப வாங்கி வந்த பரிசுகளை அவர்களிடம் தந்தேன். மூன்று குழந்தைகளும் முகங்கள் பிராகசிக்க கவர்களை வாங்கிக் கொண்டனர்.  


ஆனால் அந்த பிரகாசம் எல்லாம் கவரை திறக்கும் வரைதான். ஆர்னாவின் பரிசு தங்களுடையதை விட மாறுபட்டது என்று மற்ற இருவர் முகங்களும் சிறுத்தன. ஆர்னாவோ தனக்கு கிடைத்த பரிசு மற்ற இருவருடையவைகளை போல வசீகரமாக இல்லை என்றெண்ணி மருகினாள். நொடிப் பொழுதில் அந்த மூன்று குழந்தைகளிடமிருந்த அன்பு, நட்பு, அந்யோன்யம், மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போனது. பொறாமை மேலோங்கி நின்றதை பார்த்தேன். நான் செய்தது தவறோ என்று தோன்றியது.


மன உளைச்சுடன் சுபா வீட்டை விட்டு கிளம்பி நடந்த என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. நமது வாழ்க்கையும் இது போலத்தானே பொறாமையிலும், ஒப்பிடுதலிலும் தத்தளிக்கிறது…….  


என்னிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து நான் சந்தோஷமாக வாழ முடியும். நான் மற்றவருடன் எனது நிலையை ஒப்பிடாமல் இருக்கும் வரை. என்னை விட எனது சகோதரனோ நண்பியோ வசதியான நிலையில் இருப்பதை பார்த்த அடுத்த நிமிடம் என் மனம் தானாக எங்கள் இருவரது வசதியையும் ஒப்பிடத் துவங்கும். எதிர்மறையான சிந்தனைகள் முளைக்கும். தேவையில்லாமல் அவர்களிடம் வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்.


நம்மிடம் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே ஒரு தனி முதிற்சிதான். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை பட்டால் நமக்கு இதுவும் ருசிக்காது, அதுவும் கிடைக்காது.  


போதும் என்ற மனத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் கஷ்டம்தான். அதுவும் நம்மை ஒத்தவர்கள் நம்மை விட ஆடம்பரமாக இருப்பதை பார்த்த பின்னர் அது மிக கஷ்டமான ஒன்று. ஆனால் வளர்த்துக் கொண்டோமானால் நிம்மதியும் தந்நிறைவும் தானாக நம்மை தேடி வரும்.  


“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” அல்லவா.



-ரமா ஸ்ரீனிவாசன்.