பல்லடம்:
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் (வயது 40) என்பவர் தனது மனைவி கீதாவுடன் (36) வசித்து வருகிறார்.
இவர் கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்துவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக முறையாக கடனை செலுத்தி வந்துள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சயன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரால் கடனை செலுத்த முடியவில்லை. சென்னையில் இருந்து திரும்பிய சயன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாத கடன் தொகையை செலுத்தியுள்ளார்.
அந்தத் தொகை செயலாக்க கட்டணத்திற்கு சரியாகிவிட்டது என கூறி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் எனக்கூறி 30 பேர் சயன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
கடன் தொகையை கட்டாததால் வீட்டை ஜப்தி செய்கிறோம் எனக் கூறி சயன் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகள் என 7 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மின் இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாடகைக்கு தங்கி இருக்கும் 6 குடும்பத்தினர் பணி முடிந்து வீடு திரும்பியபோது வீடு சீல் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவு தங்க இடமில்லாமல் குழந்தைகளோடு தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.