tamilnadu epaper

கனடா புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி

கனடா புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி

ஒட்டாவா, மார்ச் 16

கனடா புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளி பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஒருவர் டெல்லியை சேர்ந்தவர் ஆவார்.


கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவா் லிபரல் கட்சித் தலைவா் பதவியை ராஜினாமா செய்தாா்.


இதையடுத்து லிபரல் கட்சி தலைவராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மார்க் கார்னி (59) சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.


அவர் கனடாவின் புதிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவர் கனடாவின் 24வது பிரதமராக பொறுப்பேற்றார். அதே நேரத்தில், கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த கமல் கேராவும் ஒருவர் ஆவார். இந்தோ கனடாவை சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் டெல்லியில் பிறந்த கமல் கேரா ஆகியோர் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் பதவி ஏற்றுள்ளனர்.


58 வயதான அனிதா ஆனந்த புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 36 வயதான கமல் கேரா சுகாதார அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.


* டெல்லியில் பிறந்த கமல் கேராவின் குடும்பம் அவர் பள்ளியில் படிக்கும்போதே கனடாவுக்கு குடிபெயர்ந்தது. பின்னர் அவர் டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.


* பார்லிமெண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களில் இளம் பெண்களில் ஒருவர் கமல் மேரா.


* 13 ஆண்கள் மற்றும் 11 பெண்களைக் கொண்ட கார்னியின் அமைச்சரவை, ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையை விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து, கமல் கேரா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு செவிலியராக, நோயாளிகளுக்கு ஆதரவளிக்க எப்போதும் இருப்பதே எனது முதன்மையான முன்னுரிமை.


அதே மனநிலை உடன் சுகாதார துறை அமைச்சராக பணியாற்றுவேன். பிரதமர் மார்க் கார்னியின் நம்பிக்கைக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று கூறியுள்ளார்.


இவர்கள் இருவருமே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.