tamilnadu epaper

கர்நாடகாவில் லாரி டிரைவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

கர்நாடகாவில் லாரி டிரைவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

பெங்களூரு,


கர்நாடகத்தில் டீசல் விலை ரூ.2 உயர்த்தப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், 18 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். லாரி உரிமையாளர்களின் முக்கியமான கோரிக்கையான டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள 18 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.


இதுதொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி மற்றும் முதல்-மந்திரி சித்தராமையாவுடன் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.


இந்தநிலையில், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடகாவில் 3-ம் நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை என்று கூறப்படுகிறது.


பெங்களூருவை போன்று மைசூரு, சிக்கமகளூரு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்திற்கு லாரி உரிமையாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மைசூருவில் சரக்கு ரெயில்களில் கொண்டு வரப்பட்ட சரக்குகளை கூட லாரி உரிமையாளர்கள் ஏற்றி செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் நேற்று அரசு சார்பில் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை(வெள்ளிக்கிழமை) லாரி உரிமையாளர்களுடன் மந்திரி ராமலிங்க ரெட்டி அல்லது முதல்-மந்திரி சித்தராமையா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது.