காலையில் வரும் காகங்கள்
கதைகள் சொல்லும் ஆயிரம்....
காகங்களுக்கும் எனக்கும்
கணக்காய் ஒரு பந்தம் உண்டு...
காகத்திடம் பேசும் சமயம்
பல உண்டு..
தனிமையில் பேசும் போது
தலை சாய்த்து அழகாய் கேட்கும்..
சாதம் வைத்து பார்த்தாலும்,
சட்னியுடன், இட்லி வைத்துப் பார்த்தாலும்,
கொஞ்சம் கூட அசையாது...
திட்டினாலும் மாறாது.
பூரி மட்டுமே பிடித்த உணவு ..மாவு
பிசையும் போதே வந்து விடும் ..
மிஞ்சிய உணவைவிட..
மிக்சரும், காரசேவுமே
காக்கையின் விருப்பம்..
மிதமிஞ்சிய பக்தி..
அமாவாசை நாட்களிலே ...
முன்னோராய் பாவித்து..
முக்கியத்துவமளித்து...
வாழையிலையிலே
வாகாய் சமைத்த பதின்
வகை காய்கறிகளும் பக்குவமாயிட்டு
கா..கா..வென பரிந்தழைத்து ..
காகம் வந்தெடுத்தால்...
முன்னோர் வந்தது போல
முகமலர்ச்சி ....
வராது போயிடக் கூடாதேயென
வடையும் அப்பளமும் ...
சனிக்கிழமை சாதத்துடன்
எள்கலந்து வைத்தால்
எட்ட நின்று பார்த்து விட்டு
ஏய்த்தோடி விடும் ...
பச்சை பிள்ளையாயொரு
பார்வை பார்க்கும் ..
கடைசியில் தோற்றுப் போய்
மிக்சர் வைக்க...
குழந்தையாய் குதூகலித்து
கும்மாளமாய் உண்ணும் ...
என் செல்ல குழந்தைகள் ...
காக்கா என்ற அழைப்பு
(அக்)கா (அக்)கா வென
காதில் ஒலிப்பதால்...
-தி.வள்ளி.
திருநெல்வேலி