சென்னை:
சென்னை அடுத்த கவரப் பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரி அணி, சாய்ராம் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதலில் பேட் செய்த சாய்ராம் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. யுவனேஷ்வரன் 96 ரன்கள் விளாசினார். 193 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்எம்கே அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் வேலம்மாள் கல்லூரி, விஐடி பல்கலைக்கழகம், சத்தியபாமா பல்கலைக்கழகம் அணிகள் வெற்றி பெற்றன.
இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆர்எம்கே - வேலம்மாள், லயோலா - விஐடி பல்கலைக்கழகம், ராஜலட்சுமி கல்லூரி - சத்தியபாமா பல்கலைக்கழகம், எஸ்விசிஇ - சாய்ராம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.