புலவர் தன் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில் கரைகண்டவர். மாகாளியின் அருளால் இவர் சொன்ன வாக்கும் பலிக்கும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் வரையில் இவருக்கே தன்னுடைய இந்தச் சிறப்புத் தெரியாமல் இருந்தது.
ஒருநாள் குருநாதரின் தினைப்புலத்தைக் காவல் காக்கச் சென்றார். அந்த ஊரில் ஓர் முரட்டு வீரன் இருந்தான். அவன் பெயர் காளிங்கராயன்.
அவன் குதிரையும் அவனைப் போலவே முரடாக வளர்க்கப் பட்டிருந்தது. புலவரின் இயற்பெயர் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது. இவர் தினைப்புலம் காவல் காக்கும் நேரம் காளிங்கராயனின் குதிரை அங்கே வந்து மேய்ந்து பயிரை இஷ்டத்துக்கு அழித்துவிட்டது. புலவர் குதிரையை விரட்டினாலும் அது போகாமல் புலவர் மீது ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தது. செய்வதறியாது திகைத்த புலவர் எச்சரிக்கை உணர்வோடு ஒதுங்கிக் கொண்டு மாகாளியையும், தம் குருவையும் மனதில் நினைத்துக் கொண்டு,
“வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
காய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் –சாய்த்துக்
கதிரை மாளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரை மாளக் கொண்டு போ!” என்று பாடிவிட்டார்.
உடனேயே குதிரை துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. கனைத்த வண்ணம் கீழே விழுந்து இறந்துவிட்டது.
திகைத்தார் புலவர்.
தன்னுடைய பாடலுக்கு இப்படி ஒரு சக்தியா?
வியப்பாய் இருந்தாலும் பயமாகவும் இருந்தது அவருக்கு. ஐயோ! என் செய்வேன், காளிங்கராயனுக்கு இது தெரிந்தால் நம்மைச் சும்மாவிடமாட்டானே? எனத் தம்மைத் தாமே நொந்து கொண்டு குருநாதரிடம் போய்ச் சொன்னார். குருநாதரும் பதறி அடித்துக் கொண்டு வேதனையோடு இறந்த குதிரையின் அருகே தம் சீடரோடு வந்து சேர்ந்தார்.
குரு நடந்ததை உணர்ந்தார் கொஞ்சம் திகைத்துப் போய் நின்றார். உடனே புலவர் சுதாரித்துக் கொண்டு எனக்கு இப்படி ஒரு வரம் இருக்கிறது நாம் ஏன் பயப்பட வேண்டும் இப்படி ஒரு பாடலையே காலிங்கராயனை வைத்து பாடினால் அவனும் இறந்து விடுவானே என்று எண்ணினார்.
குரு அதை குறிப்பால் அறிந்து திடுக்கிட்டு போய் புலவரை ஒரு பார்வை பார்த்தார்.
உடனேயே குருவின் உள்ளத்தை உணர்ந்தவராய்ப் புலவர், “குதிரை மாளக் கொண்டு போ!” என்னும் அடியை மாற்றிக் “குதிரை மீளக் கொண்டு வா!” என்று பாடினார்.
என்ன ஆச்சரியம்?
அதிசயம்?
குதிரை உயிர்பெற்று எழுந்து துள்ளிக் கொண்டு ஓடியது வேகமாய். உடலை உதறிக் கொண்டு சென்ற குதிரையைப் பார்த்த குருநாதர் மனம் மகிழ்ந்து தன் பயத்தையும் உதறிவிட்டுச் சீடனை எண்ணி பெருமிதம் அடைந்தார்.
ஆர். சுந்தரராஜன்,
சிதம்பரம்-608001.
.