தீர்த்தமலை. கடும் கோடையிலும் வற்றாத ஒரே சீராக
மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும் ராமர் தீர்த்தத்தில் குளிக்க ஆண்களும் பெண்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர் .
அப்போதுதான் அவளைப் பார்த்தேன். இவள் ..இவள் சாந்திதானே! என்னைப் பார்த்தவள் ஒரு சின்ன திடுக்கிடலோடு தீர்த்தத்தின் அடியில் நின்று குளிக்க ஆரம்பித்தாள்.
குளித்து முடித்து சாமி தரிசனம் செய்த பின் மலைப்படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தோம். நான் கேட்பதற்கு முன் அவளே பேச ஆரம்பித்து விட்டாள்."பெங்களூர்ல இருக்கேன்.
ஒரே பையன். அமெரிக்காவில் இருக்கான்.இங்கே நான் மட்டும்தான். காலேஜ்ல படிக்கும்போது
காதலில் விழுந்து கடைசியில்
பெற்றோர் பேச்சை மீற முடியாமல்
அவங்க சொன்ன மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டியதா போச்சு இப்போ அவரும் போய் சேர்ந்தாச்சு."என்றாள் "நீங்க எப்படி இருக்கீங்க?
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? " என்ற அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்தவுடன் அடிவாரம் வந்திருந்தது.
"விஷ்வா எப்படி இருக்கார்?"கேட்ட அவள் குரலில் அத்தனை உற்சாகம்.இருவரும் கல்லூரியில் காதல் வானில் சிறகடித்துப் பறந்தவர்கள்
" ம்..அவனுக்கென்ன.. மனைவி மகள்னு சந்தோஷமா இருக்கான்"என்று நான் சொன்னதும் " அப்பாடி
இப்பத்தான் நிம்மதியா இருக்கு..எங்கே என்னால் கல்யாணமே பண்ணாம இருந்துடுவாரோன்னு குற்றஉணர்ச்சியாவே இருந்துச்சி.இனி நிம்மதியா இருப்பேன்"
என்றாள்.
"இந்தாங்க என் போன் நெம்பர். நீங்க எப்போ வேணும்னாலும் பேசலாம்"என்று கூறி விட்டு கிளம்பினாள்.
கல்லூரிநாட்களில் அவளை மனதார காதலித்த விஷ்வா அவளை மணக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் இருந்ததையும் குடிக்கு அடிமையாகி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டதையும்
சொல்லி அவளது குற்ற உணர்ச்சியை அதிகமாக்கி அவள் நிம்மதியைக் கெடுக்க விரும்பாதவனாக... அரூர் செல்லும் பஸ்ஸைப் பிடிக்க நடந்தேன்.
மு.மதிவாணன்
அரூர் 636903