tamilnadu epaper

குழந்தை இல்லாததால் கர்ப்பமென நாடகமாடி குழந்தையை திருடிய பெண் கைது

குழந்தை இல்லாததால் கர்ப்பமென நாடகமாடி குழந்தையை திருடிய பெண் கைது

டெல்லி, ஏப். 17


டெல்லியில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி 9 மாதங்களாக தனது குடும்பத்தை ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை ஒன்று காணாமல் போனதாக கடந்த 15ம் தேதி பிற்பகல் 3.17 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மருத்துவமனையில் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், விசாரணையின் ஒரு பகுதியாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் மருத்துவமனையில் சுற்றித் திரிந்தது சிசிடியில் பதிவாகியிருந்து.


அந்த பெண் துப்பாட்டாவால் முகத்தை மறைத்திருந்தார். அவர், பிறந்த குழந்தைகள் இருக்கும் வார்டுகளுக்கு அருகில் சுற்றித் திரிவதும், பல பெண்களிடம் பேசுவதுமாக இருந்தார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அங்குச் சென்றனர். அப்போது, அந்த பெண் காணாமல் போன குழந்தையுடன் இருந்ததை கண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.


அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெற்கு டெல்லியைச் சேர்ந்த அப்பெண்ணின் பெயர் பூஜா தேவி (வயது 27). இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளன. இருப்பினும் தனக்கு குழந்தை பிறக்காததால் பூஜா விரக்கி அடைந்து ஒரு திட்டத்தை தீட்டினார். அந்த திட்டத்தின்படி, கணவர் உட்பட தனது குடும்பத்தினரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக பூஜா தெரிவித்தார்.


இப்படியே 9 மாதங்கள் கடந்தன. பின்னர் பிரசவத்திற்கான தேதி நெருங்கி விட்டதாக கூறி தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து, மிகப்பெரிய திட்டத்தை தீட்டிய அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு சென்று ஒரு குழந்தையை கடத்தினார். அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறி கணவரின் வீட்டிற்கு வந்தார். தன்னை போலீசார் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக பூஜா மருத்துவமனையில் இருந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வழிகளை மாற்றி வீடு திரும்பினார்.


இருப்பினும் அவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். பூஜாவின் இந்த திட்டம் குறித்து அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எதுவும் தெரியாது என்பது தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.