ஆசிரியர்: ரிஷபன்
விலை : ₹80
வெளியீடு : புஸ்தகா
தொடர்புக்கு : 9980387852
திரு.ரிஷபன் அவர்களின் கவிதைத் தொகுப்பு இது. அவரைப்பற்றி அடியேன் சொல்வதை விட பின் அட்டையில் அவரே சொன்னதைப் படியுங்கள்.
தமிழ் நாடு இ பேப்பர் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தன் கவிதைகளால்...
தொகுப்பிலிருந்து ஒரு சில கவிதைகள் இங்கே தங்கள் பார்வைக்கு:
கூட்டத்தின் நடுவில்
நிற்கிறேன்...
உன் தலை திருப்புதலுக்கும்
ஒற்றைப் புன்னகைக்கும்.
கூட்டத்தின் நடுவில்
நம்மிடையே காத்திருக்கும்
ஒரு வார்த்தைக்கும்...
தாவிப் பிடித்து
என் சம்பாஷணையை
ஆரம்பிக்க...
இடைவெளியை
இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறது
அன்னியர்களின் வரவு...
கால்களுக்குத்தானே தேவை
பாதை...மனசுக்கில்லை..
ஊடுருவி வந்து விடுகிறது
உன்னருகே...
சின்னப் பிள்ளையாய்...
ஏந்திக் கொள்வதும்
நிராகரித்து நகர்வதுமான
இரட்டை மொழிகளில்
உன் மொழி எந்த மொழி?
எல்லோரும்
நிராகரித்துப் போனபின்
நானும் உதறிவிட்டேன்
என்கிற கோபத்தில்
சாபம் விட்டதோ
மறந்து போகச் சொல்லி...
என் பெயரே...
ஒரு முறையாவது வா என் முன்...
பெயரில்லாமல் அலைவது
மிகவுமே சங்கடம் எனக்கு!
இது கவிதை ஒன்றின் கடைசி பத்தி. முன்னாள் அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் பூர்ணம் விஸ்வநாதன் (பின்னாளில் சினிமா / நாடக நடிகர்) செய்தி அறையில் ஒருமுறை தன் பெயரை மறந்து விட்டாராம். நல்லவேளை செய்தி வாசிக்க சில மணித்துளிகளுக்கு முன் அந்த அறையைத் திறந்து ஒருவர் அவர் பெயரை உச்சரிக்க, தன் பெயரைச் சொல்லி செய்தி வாசித்தாரம். அவரோடு பணிபுரிந்து சில வருடங்களுக்கு முன், மறைந்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாரயணஸ்வாமி ஒரு இதழில் பகிர்ந்த இத்தகவல் , இங்கே என் நினைவிற்கு வந்தது.
எத்தி எத்தி
விளையாட்டாய்
ஒரு கல்லைக்
கொண்டு வந்து விட்டேன்
என் தெருவுக்கு...
திரும்பிப் போக
வழியறியாது
திகைக்கிறது இப்போது!
-ஸ்ரீகாந்த்
திருச்சி