tamilnadu epaper

சண்டைப் படம்

சண்டைப் படம்

இரவு மணி பத்து.


ஹாலில் அமர்ந்து கலாமணியும், அவள் மகள் ஜனனியும் தொலைக்காட்சி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


வேகவேகமாய் ஹாலுக்குள் வந்த கிரிதர், ஜனனி கையிலிருந்த ரிமோட்டை தடாலடியாய்ப் பறித்து சேனல் மாற்றி, ஒரு திரைப்படத்தில் நிறுத்தி அதைப் பார்க்க ஆரம்பித்தான்.


கோபமான கலாமணி, "ஏண்டா உனக்கு அறிவு இருக்கா?... நாங்க ரெண்டு பேரும் சீரியல் பார்த்துட்டு இருந்தோமல்ல?... நீ பாட்டுக்கு ரிமோட்டைப் பிடுங்கி உன் இஷ்டத்துக்குச் சேனல் மாத்தறே?"


   "போதும்... போதும்.. இதுக்கு மேலே நான் போடுகிற சினிமாவைப் பாருங்கள்" என்றான் கிரிதர்.


  "நீ போடுற சினிமாவெல்லாம் பார்க்குற மாதிரியா இருக்கு?.. ஒரே சண்டை... வன்முறைதான்!..படம் ஆரம்பித்து முடியுற வரைக்கும் சண்டையோ சண்டை... ரத்தக்களறி... ச்சை... எப்படித்தான் இந்த சண்டை படத்தை ரசிச்சுப் பார்க்கிறியோ?... இதைப் பார்க்கிறதுனால என்னடா பிரயோஜனம்?... கரண்ட் செலவுதான்! என்றாள் கலாமணி.


  "நீங்க பார்க்குற சீரியல்ல மட்டும் என்ன பிரயோஜனம்?" திருப்பிக் கேட்டேன் கிரிதர்.


  "ஹும்... நீயெல்லாம் எப்பத்தான் திருந்த போறியோ?" சொல்லி விட்டு மகளையும் கூட்டிக் கொண்டு உள்ளறையை நோக்கி சென்றாள் கலாமணி.


இரவு 3 மணி.


உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கலாமணி, முன் ஹாலிலிருந்து ஏதோ சத்தம் வர திடுக்கிட்டு விழித்தாள். முதலில் "கிரீதர் பார்க்கிற சினிமாப் படத்தில் வரும் சண்டைக் காட்சியோ?" என்று நினைத்தாள். ஆனால் இடையிடையே கிரிதரின் கத்தலும் கேட்க மெல்ல எழுந்து மகளை எழுப்பினாள்.


இருவரும் அறைக் கதவை சன்னமாய்த் திறந்து வெளியே எட்டிப் பார்த்தனர்.


அங்கே முகமூடி அணிந்த இருவரை கிரிதர் புரட்டியெடுத்துக் கொண்டிருந்தான்.


நிஜத்தில் சண்டைக் காட்சியை பார்த்த தாயும் மகளும் பீதியில் உறைந்து போயினர்.


அந்த முகமூடிகள் இருவரையும் ஒரு சினிமா பட ஹீரோ பாணியில் அடித்து துவம்சம் செய்தான் கிரிதர்.


 ஒரு கட்டத்தில் அவனுடைய தாக்குதலை எதிர் கொள்ள முடியாத முகமூடிகள் தங்களால் உடைக்கப்பட்ட பின் கதவு வழியே புகுந்து வெளியே ஓடினர்.


பின்னர் அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட கலாமணி நடுங்கும் குரலில் கேட்டாள், "டேய் எ...ன்...ன...டா ந...ட...க்...கு...து இ..ங்..கே?".


தன் கைமுஷ்டியைத் தேய்த்தபடியே பேசினான் கிரிதர்.


  "படம் பார்த்திட்டு நல்லா தூங்கிட்டிருந்தேன்... ஏதோ சத்தம் கேட்டுச்சு... பின் கதவை யாரோ உடைக்கிறார்கள்!ன்னு தெரிஞ்சுது!... கண்ணை மூடி படுத்தபடியே காத்திருந்தேன்... இந்த ரெண்டு முகமூடிகளும் உள்ளார வந்து திருடப் பார்த்தானுக... விடுவேனா?.. எந்திரிச்சு என் கைவரிசையை காட்டினேன்... ஓடிட்டானுக"


  "டேய்... எப்படிடா உனக்கு இத்தனை தைரியம்?" கலா கேட்க,


  "கேட்டியல்ல?... சண்டைப் படம் பார்க்கிறதுனால என்னடா பிரயோஜனம்?ன்னு... இதுதான்... இதுதான் அந்தப் பிரயோஜனம்.."


மறுநாள் இரவு.


சீரியல் பார்த்துக் கொண்டிருந்த கலாமணியும் ஜனனியும் கிரிதர் வந்தவுடனே ரிமோட் அவன் கையில் கொடுத்து, "இந்தாப்பா ஏதாச்சும் சண்டைப்படம் போடுப்பா பார்க்கலாம்"என்றனர்.



-முகில் தினகரன்,.

கோயம்புத்தூர்.